கிருஷ்ணகி மாவட்டம் ஓசூர் அருகே நடைபெறவிருந்த தேர்த் திருவிழா நீதிமன்ற உத்தரவுபடி நிறுத்தப்பட்டுள்ளது. அதேசமயம் அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு போலீசார் தேரையும் சிறைபிடித்துள்ளனர்.
ஓசூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பாகலூரில் உள்ள மாரியம்மன் கோயில் மிகவும் பழமையான, பிரசித்திபெற்ற கோயிலாகும். இக்கோயில் பராமரிப்பு மற்றும் திருவிழா நடத்துவதில் இரு பிரிவினருக்கு இடையே மோதல் உள்ளது. இதுதொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் உள்ளது. இந்த வழக்கில் இடைக்கால தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்றம், நீதிமன்றம் இறுதி உத்தரவு வரும் வரை இருதரப்பினரும் கோயில் மேம்பாட்டுப் பணிகள் மற்றும் திருவிழா மேற்கொள்ளக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் பாகலூரில் இன்று நடைபெற இருந்த தேர்த் திருவிழாவிற்கு ஓசூர் தொகுதி தேர்தல் அலுவலரும் கோட்டாட்சியருமான விமல்ராஜ் நீதிமன்றத் உத்தரவுப்படி தடை விதித்துள்ளார். அதேசமயம் கோயிலுக்கு சென்று பக்தர்கள் விழிபடலாம் என அவர் கூறியுள்ளார்.
இதனிடையே கிராம மக்கள் தேர்த் திருவிழாவை நடத்த அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அத்துடன் கிராம மக்களே இணைந்து தேரை இழுக்க உள்ளதாகவும் வதந்தி பரவியது. இதனையடுத்து உஷாரான போலீசார் தேரை சிறைபிடித்தனர்.