திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரணவழக்கில், அஜித் குமாரை போலீசார் சராமாறியாக தாக்கியதை வீடியோவாக எடுத்த சக்தீஸ்வரன் தனக்கும், தன்னை சார்ந்தவர்களுக்கும் துப்பாக்கி ஏந்திய போலிஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு மனு ஒன்றினை எழுதியிருக்கிறார்.
சிவகங்கையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் அஜித்குமார் உயிரிழந்த வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்ட நிலையில், பிரபு, கண்ணன், சங்கரமணிகண்டன், ராஜா, ஆனந்த் ஆகிய 5 தனிப்படை காவலர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்களை வரும் 15ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
கோயிலில் அஜித் குமாரை போலீசார் சரமாரியாக தாக்கியதை, அங்கு கழிவறையில் இருந்தபடி ஊழியர் சக்தீஸ்வரன் எடுத்த வீடியோதான் வழக்கில் பெரும் திருப்புமுனயை ஏற்படுத்தியது.
அதாவது இளைஞர் அஜித் குமாரை நகை திருடியதாக கைது செய்து அழைத்து சென்றிருக்கிறார்கள். அதன்பிறகு மானாமதுரையில் இருந்து போலீசார் வந்து அஜித் குமாரை அழைத்து சென்று கோவிலில் வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். அப்போது அவருக்கு உடல்நலன் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.
இந்த சமயத்தில் அவர் தாக்கப்பட்ட சத்தம் அப்பகுதியில் கேட்டதாக கூறப்படுகிறது. இந்த சத்தம் கேட்டுத்தான் கோவிலில் கழிவறைக்கு சென்று அங்கிருந்தபடி ஊழியர் சக்தீஸ்வரன் எட்டி பார்த்துள்ளார். அப்போது அஜித் குமார் சரமாரியாக தாக்கப்படுவதை அவர் செல்போனில் வீடியோ எடுத்து இருக்கிறார்.
இந்த நிலையில்தான், இந்த வீடியோவை காண்பித்ததால் தனக்கும், தன்னை சார்ந்தவர்களின் உயிருக்கும் ஆபத்து இருப்பதாகவும், எனவே, பாதுகாப்பு அளிக்க கோரி டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு கடிதம் எழுதியுள்ளார் சக்திஸ்வரன் .
மேலும், அந்த கடிதத்தில் , தனிப்படை போலீசாரில் ராஜா என்பவர் சரித்திர பதிவேடு குற்றவாளி ஒருவரிடம் தொடர்பில் உள்ளவர் என்றும், அவரால் எனக்கும் என்னை சார்ந்தவருக்கும் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், இதனால் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.