தமிழ்நாடு

சுகவனேஸ்வரர் கோயில் யானைக்கு 'சுகமில்லை'

சுகவனேஸ்வரர் கோயில் யானைக்கு 'சுகமில்லை'

சேலம் சுகவனேஸ்வரர் கோயில் யானை கால் வீக்க நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வலதுகால் பாதத்தில் புழுக்கள் பரவி உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள கோயில் யானை மிகவும் சிரமப்பட்டு வருகிறது. யானை அவதியுறும் காட்சி பக்தர்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் 42 வயதுடைய ராஜேஸ்வரி என்ற யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானைக்கு கடந்த 5ம் தேதி முதல் வலது காலில் வீக்கம் ஏற்பட்டது. இதனால் யானை நிற்க முடியாமல் அன்று முதல் தொடர்ந்து படுத்த படுக்கையாக உள்ளது. இதையடுத்து வனத்துறையை சேர்ந்த கால்நடை டாக்டர் மனோகரன், சேலம் மண்டல கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் லோகநாதன் மற்றும் கால்நடை டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தினசரி குளூகோஸ், நரம்பு ஊசி, நோய் எதிர்ப்பு சக்தி ஊசி, தாது உப்புக்கள், களி மற்றும் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. யானைக்கு மூலிகை மற்றும் எண்ணெய் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் யானையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாமல், எழுந்து நிற்காமல் தொடர்ந்து படுத்துக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில் யானையின் முன் வலது பாதத்தில் திடீரென புழுக்கள் வைக்க ஆரம்பித்துள்ளது. இந்தப் புழுக்கள் பாதத்தில் மேலும் பரவி வருகிறது. பெரிய அளவில் புழுக்கள் பரவும் முன்பே, பாதத்தில் உள்ள புழுக்களை அகற்ற கால்நடை டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளிக்கவேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர். யானை குணமடைய வேண்டி பக்தர்கள், விநாயகர் துதி உள்ளிட்ட பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.