தெலங்கானாவில், செய்தி சேகரிக்க வீட்டிற்கு வந்த செய்தியாளர்கள் மீது நடிகர் மோகன்பாபு தாக்குதல் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் மோகன் பாபு மற்றும் அவரது மகன் மனோஜ் இடையே சொத்து பிரச்சினை இருந்துவரும் நிலையில், இருவரும் ஒருவர் மீது ஒருவர் காவல்நிலையத்தில் மாறி மாறி புகார் அளித்து வந்தனர். இதுதொடர்பான விசாரணை கடந்த சில நாட்களாக நடைபெற்றுவரும் நிலையில், அதன் தகவல்கள் எதுவும் வெளியாகாமல் இருந்து வந்தன.
இந்நிலையில், செய்தி சேகரிப்பதற்காக ஹைதராபாத்தில் உள்ள மோகன்பாபு வீட்டிற்கு செய்தியாளர்கள் சென்றுள்ளனர். அப்போது, மோகன்பாபுவும், அவருடைய பாதுகாவலர்களும் சேர்ந்து செய்தியாளர்களை கொடூரமாக தாக்கி வன்முறைகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதில் செய்தியாளர்கள் வைத்திருந்த மைக்கை பிடுங்கி, அதை வைத்தே அவர்களை மோகன்பாபு தாக்கிய வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.