Governor Tamilisai
Governor Tamilisai pt desk
தமிழ்நாடு

“அனைத்து மசோதா மீதும் நடவடிக்கை எடுத்து மக்களுக்கான ஆளுநராக செயல்படுகிறேன்” - தமிழிசை செளந்தரராஜன்

Kaleel Rahman

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை சென்றுள்ளார். தொடர்ந்து விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளையும் அதற்கு அவர் அளித்த பதிலையும் பார்க்கலாம்...

“தமிழக அரசு கொண்டுவந்துள்ள 12 மணிநேர வேலை மசோதா குறித்து உங்கள் கருத்து என்ன?”

“கவர்னராக மட்டுமல்லாமல் ஒரு டாக்டராகவும் சொல்கிறேன். உலகம் முழுவதும் மருத்துவ ரீதியாகவே ஒரு ஆராய்ச்சி நடக்கிறது. அதன் முடிவுகளில் வேலை நேரத்தை அதிகப்படுத்தி விட்டு ஓய்வு நேரத்தையும் அதிகப்படுத்திக் கொள்ளலாம் என சொல்லப்படுகிறது! மட்டுமன்றி 12 மணிநேரம் வேலை செய்வதென்பது ஒட்டுமொத்த நேர அவகாசத்தை குறைக்கவும் இல்லை, கூட்டவும் இல்லை. எவ்வளவு தொழில் செய்கிறோமோ அந்த நேரத்தை எட்டாக பிரித்துக் கொள்ளலாமா, 12ஆக பிரித்துக் கொள்ளலாமா (8 மணி நேர வேலை - 12 மணி நேர வேலை) என நாம்தான் யோசிக்க வேண்டும். 12 ஆக பிரித்துக் கொண்டால் ஓய்வு நேரம் அதிகமாக உள்ளது.

Labour

இதில், மருத்துவ ஆராய்ச்சி என்ன சொல்கிறது என்பது பற்றி ஆங்கில பத்திரிகையில் கட்டுரை வந்துள்ளது. அதில், 12 மணி நேரம் வேலை செய்துவிட்டு அதிகப்படியான நேரம் ஓய்வெடுப்பதால் மீண்டும் பணிக்கு வரும்போது பணியின் வேகம் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆக 12 மணிநேரமென்பது மருத்துவ ரீதியாகவும் உதவி செய்கிறது என்பதாக சொல்கிறார்கள். ஆனால், யாரையும் இதில் யாரும் கட்டாயப்படுத்தவில்லை. ஒரு விதத்தில் பொதுமக்களும் இதற்கு விருப்பப்பட்டு இருப்பார்கள். உண்மையில், இந்த விஷயம் கட்டாயப்படுத்தப்படுவது இல்லை என்பது ஒரு ஆரோக்கியமான சூழ்நிலை.

விருப்பப்படுபவர்கள் அவர்களின் நேர மாற்றத்தின்படி தொழிலுக்கு ஏற்றவாறு நேரத்தை எடுத்துக் கொள்ளலாம். ஆனால், இதில் ஒரு விஷயம் என்னவென்றால் விருப்பப்பட்டு தான் எடுக்கிறோம் என்ற பெயரில் யாரும் யாரையும் வருங்காலத்தில் கட்டாயப்படுத்தி விடக்கூடாது. அதை நாம் கண்காணித்துக் கொள்ளலாம். எதுவாகினும் தொழிலாளர் விருப்பத்திற்கு விஷயத்தை விட்டு விடலாம் என்பது என்னுடைய கருத்து”

Tamilisai Arrived

“சில மாநிலங்களில் ஆளுநருக்கு எதிராக ஒரு போக்கு நிலவுகிறதே?”

“அது கவர்னருக்கு எதிரான ஒரு போக்கு, அவ்வளவுதான். கவர்னரை அவர்கள் அரசியல் ரீதியாக பார்க்கிறார்கள். நான் தமிழகத்தை பற்றி சொல்லவில்லை. தமிழகத்தில் ஆளுநர் ரவியிடம் கேட்டுக் கொள்ளுங்கள். தெலங்கானாவில் மக்களுக்கான ஆளுநராக தான் நான் செயல்படுகிறேன். மக்கள் பாதிக்கப்பட்டால் மக்கள் சார்ந்து நான் நிற்கிறேன். இப்போதைக்கு தெலங்கானாவில் உள்ள அனைத்து மசோதா மீதும் நடவடிக்கை எடுத்திருக்கிறேன்”

“தற்போது ராமநாதபுரத்தில் படித்து வரும் எய்ம்ஸ் மருத்துவ மாணவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனையை பார்க்க முடியாத நிலை உள்ளதே?”

“எய்ம்ஸ் கட்டடத்தில் படிக்கிறோமா ராமநாதபுர மருத்துவமனை கட்டடத்தில் படிக்கிறோமா என்பதில்லை விஷயம். மனிதர்களை படிக்கிறோமா நோயை படிக்கிறோமா என்பதில்தான் விஷயம் உள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை செங்கலால் மட்டும் கட்டப்படுவது இல்லை. மனிதர்களின் இதயத்தாலும் மனிதாபிமானத்தாலும் கட்டப்படுகிறது. எய்ம்ஸ் என்பது அதிகப்படியான நவீன தொழில்நுட்பத்தோடு உலகத்தரம் வாய்ந்தது. எல்லா விதத்திலும் உயர் தொழில்நுட்பத்தோடு கூடிய மருத்துவ வசதி நம் தமிழகத்திற்கு கிடைப்பது மிக மகிழ்ச்சியான ஒன்று.

PM Modi

ஆரம்ப காலகட்டத்தில் எல்லாவற்றிலும் ஒரு பிரச்னை இருக்கும். ஆகவே முதல் இரண்டு வருடங்கள் எய்ம்ஸ் கட்டடத்தில் தான் படிக்க வேண்டும் என்பதில்லை, ஆரம்பகால படிப்பை எங்கு வேண்டுமென்றாலும் படிக்கலாம். எய்ம்ஸ் அப்படிதான். எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடித்த பிறகு தான் எல்லோருக்கும் அதன் சிறப்புகள் தெரியவரும். அப்போது எல்லா விமர்சனங்களும் தவிடு பொடி ஆகிவிடும்” என்றார்.