தமிழ்நாடு

அத்திவரதரை தரிசித்த தெலுங்கானா முதலமைச்சர்

webteam

காஞ்சிபுரம் அத்திவரதரை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மற்றும் ஆந்திர எம்எல்ஏ ரோஜா ஆகியோர் வழிபட்டனர். 

காஞ்சிபுரத்தில் உள்ள பழமையான வரதராஜப் பெருமாள் கோயிலில் கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் அத்திவரதர் வைபவம் நடைபெற்று வருகிறது. சயனகோலத்தைத் தொடர்ந்து, நின்ற திருக்கோலத்தில் அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். 43வது நாளான இன்று, மஞ்சள் மற்றும் பச்சைப்பட்டு உடுத்தி அத்திவரதர் வீற்றிருக்கிறார். 

அத்திவரதர் சுவாமியைத் தரிசிக்க, கோயிலிலிருந்து காந்தி சாலை வரை 6 கிலோ மீட்டர் தூரம் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள், கோயில் அருகே அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களில் தங்கவைக்‌கப்படுகின்றனர். அதன் பிறகு கூட்டநெரிசலைப் பொறுத்து, அவர்கள் சுவாமியைப் பார்க்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தரிசனத்திற்கு இன்று சுமார் 10 மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்ததாக பக்தர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் இன்று தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் மற்றும் ஆந்திர எம்எல்ஏ ரோஜா ஆகியோர் அத்தி வரதரை தரிசித்து சென்றனர். சந்திரசேகர் ராவுக்கு மாலை அணிவிக்கப்பட்ட மரியாதை செய்யப்பட்டது.