தமிழ்நாடு

திருமணமான 7 மாதத்தில் இளம்பெண் தற்கொலை: வரதட்சணை கொடுமை என பெற்றோர் புகார்

திருமணமான 7 மாதத்தில் இளம்பெண் தற்கொலை: வரதட்சணை கொடுமை என பெற்றோர் புகார்

kaleelrahman

திருவாரூரில் திருமணமான 7 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். வரதட்சணை கொடுமையால் உயிரிழந்துள்ளதாக பெண்ணின் பெற்றோர் புகார் கூறியுள்ளனர்.

திருவாரூர் அடுத்த தியானபுரம் சாப்பாவூர் கிராமத்தை சேர்ந்த 32 வயதான பிரபாகரனுக்கும், அழகிரி காலனி பகுதியில் வசித்து வரும் நாகராஜனின் மகள் திவ்யாவிற்கும் (24) கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடந்துள்ளது. டிரம்ஸ் இசை கலைஞரான பிரபாகரன் மதுபோதைக்கு அடிமையானவர் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் தினசரி பிரபாகரன் மது அருந்திவிட்டு திவ்யாவை அடித்து துன்புறுத்தி சித்ரவதை செய்து வந்ததாக திவ்யாவின் தந்தை ஏற்கெனவே குற்றஞ்சாட்டியுள்ளார்.

இருவருக்கும் பிரச்னை அதிகமாகவே திவ்யாவை தனது வீட்டிற்கு நாகராஜன் அழைத்து வந்துவிட்டார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரபாகரனின் மூத்த சகோதரரான சேட்டு என்பவர் உயிரிழந்துள்ளார். இந்த துக்க நிகழ்வுக்காக திவ்யாவும் அவரது குடும்பத்தினரும் சென்றுள்ளனர். கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் பிரபாகரன் மற்றும் திவ்யாவை சமாதானம் செய்து சேர்ந்து வாழும்படி இருதரப்பு பெற்றோர்களும், உறவினர்களும் கூறியுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து திவ்யாவை பிரபாகரனுடன் சேர்த்து வைத்துவிட்டு நாகராஜன் திரும்பி உள்ளார். இந்நிலையில் இன்று காலை திவ்யா தூக்கில் பிணமாக தொங்குவதாக பிரபாகரன், திவ்யாவின் தந்தைக்கு தொலைபேசி மூலம் தகவல் அளித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த திவ்யாவின் குடும்பத்தினர் நேரில் சென்று பார்த்தபோது திவ்யா தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார்.

இதனையடுத்து உடனடியாக திருவாரூர் தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காவல் ஆய்வாளர் செல்வம் மற்றும் காவல் துறையினர் வந்து திவ்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் திவ்யாவை மதுபோதையில் தினசரி பிரபாகரன் சித்ரவதை செய்து வந்ததாகவும், 50 லட்ச ரூபாய் ரொக்கம் கேட்டு வரதட்சணை கொடுமை செய்துள்ளதாகவும், போலீசார் பிரபாகரனை கைது செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் உயிரிழந்த திவ்யாவின் தந்தை நாகராஜன் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் திருமணமாகி ஏழு மாதங்களே ஆகியுள்ளதால் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.