தமிழ்நாடு

பணியிடத்தில் பாலியல் தொல்லை : ‘டிசிஎஸ்’ நிறுவன பெண் ஊழியர் புகார்

பணியிடத்தில் பாலியல் தொல்லை : ‘டிசிஎஸ்’ நிறுவன பெண் ஊழியர் புகார்

webteam

பணியிடத்தில் தன்னை மேல் அதிகாரி ஒருவர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக டிசிஎஸ் முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

டிசிஎஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த பெண் ஊழியரான மாயா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் காஞ்சிபுரம் தொழிலாளர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் தான் டிசிஎஸ் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றிய போது, தன்னை தனது மேல் அதிகாரி ஒருவர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும், அதுதொடர்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட குழுவும் ஒருதலை பட்சமாக விசாரித்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

மாயாவின் குற்றச்சாட்டுகளில் உள்ள தகவலின் படி, அவர் கடந்த ஆண்டில் டிசிஎஸ் நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார். அங்கு பணிபுரியும் மேலாளர் ஒருவர் மாயாவிடம் நண்பர் போல பேசி பலகியுள்ளார். அத்துடன் புராஜக்ட் மேனேஜர் என்பதால் அவரிடம் பணி நிமிர்த்தமாக மாயா பேசியுள்ளார். ஆனால் மாயா குறித்து மனதிற்குள் தவறான எண்ணங்களை வளர்த்துக்கொண்டு பழகியுள்ளார் அந்த மேனேஜர். கடந்த வருடம் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, அலுவலகத்தில் இருந்த அனைவரும் புகைப்படம் எடுப்பது என கொண்டாட்டத்தில் இருந்துள்ளனர். அப்போது மாயாவின் அருகே இருந்த அந்த மேலாளர் அவரை தவறாக சீண்டியுள்ளார். அப்போது மாயா அசவுகரியமாக உணரவே, தெரியாமல் நடந்தது போல அந்த மேனேஜர் காட்டிக்கொண்டுள்ளார்.

இதையடுத்து அலுவலக ரீதியான பணிக்காக கடந்த ஆண்டு மார்ச் மாதம் அந்த மேனேஜர் உள்ளிட்ட அலுவலகத்தினருடன் மாயா லண்டன் சென்றுள்ளார். அங்கு புராஜக்ட் பணி முடிந்த பின்னர் ஏப்ரல் மாதம் இந்தியாவிற்கு திரும்ப மாயா திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் மார்ச் மாதம் 20ஆம் தேதி இரவு 7 மணியளவில் அலுவல் ரீதியான மீட்டிங் என மாயாவை தனது அறைக்கு அந்த மேனேஜர் அழைத்துள்ளார். இருவரும் தனியாக பங்கேற்ற அந்த மீட்டிங்கில் இரவு 11 மணி வரை மேனேஜர் மாயாவை காக்க வைத்துள்ளார். மாயாவின் போன் சார்ஜ் இன்றி ஆஃப் ஆகியுள்ளது. பின்னர் அந்த மேனேஜர் மாயாவிற்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளார். உடனே அங்கிருந்து வெளியேறிய மாயா, தனது இருக்கைக்கு சென்றுள்ளார். அவரை பின்தொடர்ந்து அந்த மேனேஜரும் சென்றுள்ளார். 

மாயா பதட்டத்துடன் இருப்பதைக் கண்ட சில பணியாளர்கள், ஏதேனும் பிரச்னையா என விசாரித்துள்ளனர். மாயா தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறிவிட்டு, சில பணியாளர்களின் உதவியுடன் இருப்பிடம் சென்றுள்ளார். பின்னர் இதுதொடர்பாக மனிதவள மேம்பாட்டுதுறைக்கு புகார் ஒன்றை அளித்துள்ளார். இதையடுத்து இந்த விவகாரம் அலுவலகத்தில் சர்ச்சையை கிளப்ப, பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரிக்க குழு ஒன்று அமைக்கப்பட்டது. ஆனால் மனிதவள மேம்பாட்டு அதிகாரி மற்றும் சக மேனேஜர்களின் உதவியுடன் அந்தக் குழுவிற்கு குற்றம்சாட்டப்பட்ட மேனேஜர் செக் வைத்தார். இதனால் மாயாவின் புகார் சரியாக விசாரிக்கப்படாமால், அவர் தவறான குற்றச்சாட்டை வைத்ததுபோல அந்த குழு முடிவெடுத்துள்ளது. 

இதனால் அதிருப்தி அடைந்த மாயா தற்போது காஞ்சிபுரத்தில் உள்ள தொழிலாளர் நல நீதிமன்றத்தில் புகார் தெரிவித்துள்ளார். அத்துடன் தனக்கு நேர்ந்த துயரத்தையும், தனக்கு நீதி கிடைக்காததையும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றம் விசாரணை நடத்தவுள்ளது. தனக்கு உரிய நீதி கிடைக்கும் என மாயா நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

(Courtesy : The News Minute)