students
students file image
தமிழ்நாடு

சிவகாசி: மனநலம் பாதிக்கப்பட்ட மாணவர்களை கழிவறையை கழுவ வைத்த ஆசி‘றி’யர்?.. பின்னணியில் பகீர் சம்பவம்!

PT WEB

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே அரசு உதவி பெறும் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 80 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், கல்வி கற்கும் மனநலம் பாதிக்கபட்ட மாணவர்களை பள்ளியில் உள்ள கழிவறையை சுத்தம் செய்வது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் பள்ளி சீருடையில் உள்ள மாணவர் கழிவறையை சுத்தம் செய்கிறார். அவரது ஆடை கூட சரியாக அணியாத நிலையை பார்க்கும் போது மிகவும் பரிதாபமாக உள்ளது.

சம்பவம் குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜோசப் தினகரனிடம் கேட்டபோது, “இது குறித்து மாணவர்களிடம் விசாரித்ததில் இங்கு பணியாற்றும் இடைநிலை ஆசிரியர் இம்மானுவேல் தனக்கு தலைமை ஆசிரியர் பதவி வழங்காததை மனதில் வைத்து, பள்ளியின் பெயரை களங்கப்படுத்தும் நோக்கில் மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்து, அவரே வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது” எனக் கூறினார்.

மேலும், இந்த விவகாரத்தில் பேராயர் தலைமையில் விடுதி இயக்குநர் விசாரணை நடத்த உள்ளதாகவும் பள்ளி தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனநலம் பாதிக்கப்பட்ட மாணவர்களை கவனித்துக்கொள்ள வேண்டிய ஆசிரியரே இதுபோன்ற செயலில் ஈடுபட்டது பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.