தமிழகத்தில் ஜூன் 8, 9 தேதிகளில் ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் டெட் (Tamil Nadu Teachers Eligibility Test ) என்ற ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். அதன்படி, இந்த ஆண்டுக்கான டெட் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த பிப்ரவரி மாதம் 28ஆம் வெளியிட்டது. தொடர்ந்து டெட் தேர்வுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த மார்ச் 15-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 12-ஆம் தேதியுடன் முடிந்தது.
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு மொத்தம் 5 லட்சத்து 90 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தேர்வு வாரியம் தெரிவித்தது. இந்த தேர்வு ஜூன் மாதம் நடத்தப்படும் என்று மட்டும் தெரிவிக்கப்பட்டது. தேர்வு நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 8 மற்றும் 9ம் தேதிகளில் டெட் தேர்வு நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. ஜூன் 8ம் தேதி முதல் தாள், ஜூன் 9ம் தேதி 2ம் தாள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு இன்னும் 23 நாட்களே உள்ளன. முன்னதாக, கடந்த 2013 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. ஆனால், கடந்தாண்டு நீதிமன்ற வழக்கு காரணமாக இந்த தேர்வு நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.