தமிழ்நாடு

மரக்கன்றுகளை இலவசமாக வழங்கும் தேநீர்க்கடைக்காரர்

மரக்கன்றுகளை இலவசமாக வழங்கும் தேநீர்க்கடைக்காரர்

Rasus

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் புதுக்கோட்டை மாவட்ட தேநீர்க்கடை உரிமையாளர் ஒருவர், தனது வாடிக்கையாளர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி வருகிறார்.

புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் நாலு ரோடு பகுதியில் எட்டு ஆண்டுகளாக டீக்கடை நடத்தி வருபவர் சிவக்குமார். கஜா புயல் சமயத்தில், தனது டீக்கடையில் வாடிக்கையாளர்கள் வைத்திருந்த பத்தாயிரம் ரூபாய் ‌கடனை தள்ளுபடி செய்த சிவக்குமார், தற்போது மரக்கன்றுகளை இலவசமாக வழங்கி வருகிறார். சாதாரணமான டீக்கடையில் கிடைக்கும் வருவாயில், லாபத்தை எதிர்பார்க்காமல் மரம் வளர்த்து பசுமை பரப்பும் சிவக்குமாரின் சேவை, வாடிக்கையாளர்களை நெகிழ வைத்துள்ளது.

தற்போது பத்தாயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 500 மரக்கன்றுகளை முதல்கட்டமாக வழங்கியுள்ள சிவக்குமார், இதேபோல், தன்னால் இயன்ற அளவுக்கு மரக்கன்றுகளை வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார். தன்னை வாழ வைத்த பூமிக்கு சேவையாற்ற துடிக்கும் இந்த டீக்கடைக்காரர், மரக்கன்றுகளை வழங்கும் தனது செயலால் மக்களின் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்துவிடுவார் என்பதில் சந்தேகமில்லை.