தமிழ்நாடு

டாஸ்மாக் விற்பனை நேரத்தை மாற்றலாமே? அரசுக்கு பரிந்துரைத்த உயர்நீதிமன்றம்!

PT

டாஸ்மாக் விற்பனை நேரத்தை மாற்றியமைக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பரிந்துரைத்துள்ளது.

மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதைக் கருத்தில்கொண்டு மதுபானத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அவர் தாக்கல் செய்திருந்த மனுவில், ’தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான மதுபானக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.

இதனால் எதிர்காலத்தை நம்பியுள்ள மாணவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. குறிப்பாக 21 வயதிற்குக் கீழ் உள்ளவர்களுக்கு டாஸ்மாக் மதுபானம் விற்பனை செய்யப்படுவதால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. இதற்கு தடை விதிக்க வேண்டும். மேலும், மதுபான விற்பனையை தமிழில் அச்சிட வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு இன்று (ஜனவரி 5) விசாரணைக்கு வந்தது. அப்போது, ’21 வயதிற்குக் கீழ் உள்ளவர்களுக்கு டாஸ்மாக் மதுபானம் விற்பனை செய்வதில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்’ என தெரிவித்த நீதிபதிகள், ’பொதுமக்களின் நலன் கருதி, டாஸ்மாக் விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை மாற்றியமைக்கவும் தமிழக அரசுக்குப் பரிந்துரைத்தனர்.

மேலும், மதுபான விடுதிகளில் பயன்படுத்தக்கூடிய உணவுப் பொருட்கள் தரமானவையாக இருக்க வேண்டும். மது விற்பனை விலைப்பட்டியல் மற்றும் மதுவினால் ஏற்படக்கூடிய தீமைகள் குறித்து அனைத்தும் தமிழில் அச்சிடப்பட வேண்டும்’ என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் மதியம் 12 மணிக்கு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு, இரவு 10 மணிக்கு மூடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 - ஜெ.பிரகாஷ்