எந்தெந்த வயதினருக்கு எந்த நேரத்தில் மதுவிற்பனை என்ற விவரம் வெளியாகியுள்ளது
பொது ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் உள்ள மதுபானக் கடைகளை மூட மத்திய மாநில அரசுகள் உத்தரவிட்டு இருந்தன. 40 நாட்கள் ஊரடங்கு முடிவடைந்த நிலையில் மேலும் இரண்டு வாரங்களுக்கு அதாவது மே 17 ஆம் தேதி வரை மூன்றாவது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இருப்பினும், சில தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன.
அதன்படி, நாட்டின் பல பகுதிகளில் மதுபானக்கடைகள் திறக்கப்பட்டன. தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தடை செய்யப்படாத பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் எந்தெந்த வயதினருக்கு எந்த நேரத்தில் மதுவிற்பனை என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையும்,40-50 வயதுக்குட்பட்டவர்களுக்கு மதியம் 1 மணி முதல் மதியம் 3 மணி வரையும்,40 வயதுக்குட்பட்டவர்களுக்கு மதியம் 3 மணி முதல் மாலை 5 மணி வரை விற்பனை என காவல்துறை தெரிவித்துள்ளது, மேலும், ஒவ்வொரு டாஸ்மாக் கடை முன்பும் 2 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது