தமிழ்நாடு

டாஸ்மாக் வழக்கு : தமிழக அரசு மனுவை எதிர்த்து வைகோ ரிட் மனு

webteam

டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதை நீக்க வேண்டும் என தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவிற்கு எதிராக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எதிர்மனு தாக்கல் செய்துள்ளார்.

தமிழகத்தில் பொதுமுடக்கத்திற்கு இடையே அமல்படுத்தப்பட்ட தளர்வுகளின்படி, சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை என உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு, பின்னர் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதில் பிழைகள் இருந்ததால் விசாரிக்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து நாளை மனு விசாரணைக்கு வரவுள்ளது. இந்நிலையில் தமிழக அரசின் மனுவை எதிர்த்து வைகோ சார்பில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல குடும்பங்களை நாசமாக்கும் மதுக்கடைகளை திறக்க கூடாது என வலியுறுத்தி இன்று மதியம் 2 மணிக்கு, வைகோ சார்பில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.