மத்திய அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் வாக்குவாதம் pt desk
தமிழ்நாடு

தஞ்சை பாஜக தெற்கு மாவட்ட தலைவர் யார்? - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் வாக்குவாதம்

தஞ்சையில் மத்திய அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் பாஜக தெற்கு மாவட்ட தலைவராக ஜெய் சதீஷ் அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

PT WEB

செய்தியாளர்: ந.காதர்உசேன்

தஞ்சை தனியார் மண்டபத்தில் தஞ்சை தெற்கு மாவட்ட பாஜக நிர்வாகிகள் அறிவிப்புக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தஞ்சை மாவட்ட பொறுப்பாளர்கள் வரிசையாக வாசிக்கப்பட்டு வந்தனர். அப்போது தஞ்சை தெற்கு மாவட்ட தலைவராக ஜெய் சதீஷ் அறிவிக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர் தரப்பினர் அமைச்சர் முன்னிலையில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் வாக்குவாதம்

இதையடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை மற்ற நிர்வாகிகள் அமைதியாக இருக்கும் படி தெரிவித்து அமர வைத்தனர். இதன் காரணமாக சுமார் ஐந்து நிமிடம் அங்கு பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது. மத்திய அமைச்சர் முன்னிலையில் இது போன்ற வாக்குவாதத்தில் ஈடுபட்டது கட்சி நிர்வாகிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

முன்னதாக தஞ்சை தெற்கு மாவட்ட பாஜக தலைவர் போட்டிக்காக தஞ்சையைச் சேர்ந்த ஜெய் சதீஷ், ஒரத்தநாடு கர்ணன் உஞ்சியவிடுதி துரை, கண்ணுகுடி துரைமுருகன் ஆகியோர் போட்டியில் இருந்தனர். இந்நிலையில் ஏற்கனவே தஞ்சை மாவட்ட தலைவராக இருந்த ஜெய் சதீஷை, மீண்டும் அறிவித்த உடனேயே எதிர்ப்பு கிளம்பியது. பின்பு அனைவரையும் சமாதானப்படுத்தி மீண்டும் நிகழ்ச்சி தொடங்கியது.