தமிழ்நாடு

மாட்டு வண்டியில் பயணம்... நெல் அறுவடை: அசத்திய பிரான்ஸ் நாட்டினர்

மாட்டு வண்டியில் பயணம்... நெல் அறுவடை: அசத்திய பிரான்ஸ் நாட்டினர்

kaleelrahman

பாபநாசம் பகுதியில் கலாச்சார நிகழ்ச்சிகளை கண்டு வியந்த பிரான்ஸ் நாட்டினர், நெல் அறுவடை பணியிலும் ஈடுபட்டனர்.

கொரோனா நோய் பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சுற்றுலாத்துறை மிகவும் பாதிக்கப்பட்டது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை இல்லாமல் இருந்த நிலையில், மீண்டும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வர தொடங்கியுள்ளனர். இந்நிலையில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் இந்தியா வந்துள்ளனர்.

இவர்கள் சென்னை, மகாபலிபுரம், பாண்டிச்சேரி சென்று விட்டு பாபநாசம் பகுதிக்கு வந்தனர். தஞ்சை வந்த சுற்றுலா பயணிகள் ஆடுதுறை பெருமாள் கோவில் கிராமத்தில் கரகாட்டம் உள்ளிட்ட கலாச்சார நிகழ்ச்சிகளை கண்டு வியந்தனர். பின்னர் புத்தூர் கிராமத்திற்கு மாட்டு வண்டியில் சென்ற பிரான்ஸ் நாட்டு பயணிகளை அப்பகுதி மக்கள் நெற்கதிர்களை மாலையாக அணிவித்து ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

பின்னர் நெல் வயல்களில் அறுவடை செய்யும் பகுதிகளில் பெண் விவசாயிகளுடன் சேர்ந்து பிரான்ஸ் பயணிகளும் அறுவடை பணியில் ஈடுபட்டனர். பின்னர் தமிழகத்தில் பயணம் செய்து கிராமங்களை பார்வையிட்டதும் தமிழக கலாச்சாரமும் மிகவும் பிடித்திருக்கிறது. இந்த மக்கள் மிகவும் அன்போடு பழகுவது எங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. தமிழர்களின் வரவேற்பு பெருமிதம் அளிப்பதாக இருக்கிறது என தெரிவித்தனர்.