ஐபிஎல் போட்டியை ரத்து செய்யக்கோரி, மைதானத்திற்கு பூட்டுப்போடும் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி போராட்டம் நடந்து வரும் சூழலில், தமிழகத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நடத்தக்கூடாது என தமிழக வாழ்வுரிமை கட்சி எச்சரிக்கை விடுத்திருந்தது. இதே கோரிக்கையை பல்வேறு அமைப்புகளும் வலியுறுத்தியிருந்தன. அதையடுத்து சேப்பாக்கம் மைதானத்தில் சுமார் 4 ஆயிரம் காவல்துறையினர் இன்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், திடீரென சேப்பாக்கம் மைதானத்தின் நுழைவாயில் அருகே கூடிய தமிழக வாழ்வுரிமை கட்சியினர் அங்குள்ள கதவுக்கு பூட்டுப் போட முயற்சித்தனர். அப்போது அவர்களை காவல்துறையினர் தடுத்து, கைது செய்தனர். அப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், ஐபிஎல் போட்டிகளை புறக்கணிக்க கோரியும் அவர்கள் முழக்கமிட்டனர்.