தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தின் ஒருசில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றுமுதல் வரும் 25ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யும் எனவும் 26 மற்றும் 27ஆம் தேதிகளில் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 28ஆம் தேதி தமிழகத்தின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை இன்று ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.