கொரோனா ஊரடங்கிலும் கிராமம் கிராமமாகச் சென்று தமிழர் மரபுக்கலைகளை இலவசமாகப் பயிற்றுவித்து வருபவரைப் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த வீரத்தமிழர் சிலம்பாட்டக் கழக நிறுவனர் சுப்ரமணியன். இப்போது பொது ஊரடங்கு அமலில் உள்ளதால் இந்த விடுமுறைக் காலத்தைப் பயனுள்ளதாக மாற்ற முடிவு செய்த சுப்ரமணியன், சீர்காழியைச் சுற்றியுள்ள கிராமங்களுக்குச் சென்று அங்கு ஆர்வமுள்ள ஏழை சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்குத் தமிழரின் பாரம்பரிய மரபுக்கலையான வீரவிளையாட்டுகளைப் பயிற்றுவித்து வருகிறார்.
இது குறித்து சுப்ரமணியன் கூறும் போது “ நமது பாரம்பரிய கலைகள் சிறு கிராமங்கள் உள்ளிட்ட அனைத்துக் கிராமங்களுக்கும் செல்ல வேண்டும்.
அதற்கான முயற்சிகளை நான் இருக்கும் வரை தொடர்வேன். இக்கலைகளை இளைஞர்கள் பயிலும் போது அது அவர்களுக்குத் தற்காப்புக் கலையாகவும், தன்னம்பிக்கையை வளர்ப்பதாகவும் இருக்கும்” என்றார்.
தனியார்ப் பள்ளிகளில் பகுதிநேர வகுப்புகள் மூலம் கிடைக்கும் சிறு வருமானமே சுப்ரமணியனின் வாழ்வாதாரமாக உள்ள நிலையில் சுப்ரமணியன் எடுத்துள்ள இந்த நடவடிக்கைக்குப் பொதுமக்கள் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர். இவரும் இவரது மாணவர்களும் கடந்த ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற ஆசிய அளவிலான சிலம்பாட்ட போட்டிகளில் கலந்து கொண்டு பல்வேறு பதக்கங்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது