தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அடுத்த 24 மணிநேரத்துக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தலைநகரான சென்னையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. கோயம்பேடு, கிண்டி, ஈக்காட்டுதாங்கல், ஆழ்வார்பேட்டை, அடையாறு, நுங்கம்பாக்கம், பெசன்ட் நகர், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலையில் மழை பொழிந்தது. ஆவடி, அம்பத்தூர், மணலி, மாதவரம், செங்குன்றம் போன்ற சென்னையின் புறநகர் பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்தது.
சேலம் மாவட்டம் ஓமலூர், காடையாம்பட்டி, தாராமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை வெளுத்து வாங்கியது. நீர்நிலைகள் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், திண்டிவனம் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை தொடங்கிய மழை இரவு வரை நீடித்தது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 3ஆவது நாளாக மழை பெய்தது. மயிலாடுதுறை, மணல்மேடு உள்ளிட்ட இடங்களில் 2 மணி நேத்திற்கும் மேலாக பெய்த மழையால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி மற்றும் சுற்றுப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், மாலையில் பலத்த மழை பெய்தது. காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, ஈரோடு, அரியலூர், தருமபுரி, ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது.
இதனிடையே, காஞ்சிபுரம் மாவட்டம் ராஜசூரியன் பேட்டையில் கனமழையால் வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்துவிழுந்து வத்சலா என்ற பெண் உயிரிழந்தார். அவருக்கு உறவினர்கள் யாரும் இல்லாததால் கிராம மக்களே அவரது உடலை அடக்கம் செய்தனர். மயிலாடுதுறை அருகே மழையால் வீட்டின் முன்பு அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்த விவசாயி குமார் பரிதாபமாக உயிரிழந்தார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை பயிர்கள் சாய்ந்து சேதம் அடைந்தன.
இந்த நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்திற்கு, புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர், திருச்சி, சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. 5 மாவட்டங்களில் இன்றும் மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.