தமிழ்நாடு

ராமநாதபுரத்தைப் பிரித்து கமுதி மாவட்டம்: அரசு பரிசீலனை

ராமநாதபுரத்தைப் பிரித்து கமுதி மாவட்டம்: அரசு பரிசீலனை

webteam

ராமநாதபுரம் மாவட்டத்தை பிரித்து புதிதாக கமுதி மாவட்டத்தை உருவாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருகிறது.

இது தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர், பரமகுடி உதவி ஆட்சியர் ஆகியோருக்கு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நடராஜன் எழுதிய கடிதம் வெளியாகியுள்ளது. அதில் கமுதி, கடலாடி, முதுகுளத்தூர், திருச்சுழி மற்றும் புதிதாக தோற்றுவிக்கக் கோரியுள்ள பார்த்திபனூர் வட்டங்களை இணைத்து கமுதி மாவட்டம் உருவாக்கக்கோரி தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பாக முதலமைச்சரிடம் கடிதம் வழங்கப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் பரமக்குடி வட்டத்தினை பிரித்து பார்த்திபனூர் மற்றும் நயினார்கோவில் வட்டங்ளை உருவாக்கவேண்டும், திருவாடானை வட்டத்தை பிரித்து ஆர். எஸ் மங்களம் வட்டம் உருவாக்கவேண்டும் என்றும் வருவாய்துறை அலுவலர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் வரும் 25ம் தேதி நடைபெறவுள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் பங்கேற்க உள்ளதால், மேற்கண்ட பொருள் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட உரிய சாத்தியகூறுகளை ஆராய்ந்து விரிவான அறிக்கையை அனுப்பி வைக்கும்படி ஆட்சியர் கடிதம் எழுதியுள்ளார். இதன்மூலம், புதிதாக கமுதி மாவட்டம் உருவாக்கப்படலாம் என்றும் இது தொடர்பான அறிவிப்பை முதலமைச்சர் வரும் 25ம் தேதி அறிவிக்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.