நிவர் புயல் டெல்டாவைத் தாக்க வாய்ப்பில்லை என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். அதேவேளையில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்
நிவர் புயல் குறித்து பதிவிட்டுள்ள தமிழ்நாடு வெதர் மேன், ''நிவர் புயலானது சரியாக எங்கே கடக்கும் என உறுதியாக சொல்லமுடியவில்லை. ஐரோப்பா, பிரிட்டிஷ் மற்றும் ஜெர்மனிய வானிலை ஆய்வு மையங்களின் தகவலின்படி,நிவரானது புதுச்சேரிக்கும் சென்னைக்கும் இடையே மகாபலிபுரம் அருகே கரையைக் கடக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது, அதேவேளையில் வட அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளின் வானிலை மையங்கள் காரைக்கால் - பரங்கிப்பேட்டை அருகே கரையை கடக்க வாய்ப்பு என தெரிவித்துள்ளன.
என்னுடைய கணிப்பின்படி இந்த புயல் வலுவிழந்தால் அது டெல்டா பக்கம் திரும்பலாம். ஆனால் இது தீவிரமாக இருப்பதால் டெல்டா பக்கம் திரும்ப வாய்ப்பு இல்லை. அதனால் டெல்டாவிற்கு மழை இருக்குமே தவிர நிவர் புயல் டெல்டாவிற்கானது அல்ல'' எனக் குறிப்பிட்டுள்ளார்
வானிலை மையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, நிவர் புயலானது அதிதீவிர புயலாக மாறி காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே இன்று இரவு கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 130 முதல் 140 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு இருப்பதாகவும், காற்றின் வேகம் அதிகபட்சமாக மணிக்கு 155 கிலோமீட்டர் வரை எட்டக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.