தமிழக அரசியல் நிலவரம் குறித்து, ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிக்கை அனுப்பியிருப்பதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குடியரசுத் தலைவர் அலுவலகம், பிரதமர் அலுவலகம், உள்துறை அமைச்சகம் ஆகியவற்றுக்கும் வித்யாசாகர் ராவ் அறிக்கை அனுப்பியிருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா ஆகியோருடனான சந்திப்பிற்கு பின்னரே, இந்த அறிக்கையை ஆளுநர் அனுப்பியிருப்பதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருவரது கோரிக்கைகள் குறித்தும், அவர்கள் அளித்துள்ள தகவல்களின் அடிப்படையிலும், ஆளுநரின் அறிக்கை உள்ளதாக, அவர்கள் தெரிவித்துள்ளனர். மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்குடன் ஆளுநர் பேசிய பின்னர், உரிய ஆலோசனைக்கு பிறகு இறுதி முடிவெடுக்கப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். ஆளுநரிடமிருந்து விரிவான மற்றொரு இறுதி அறிக்கை பெறப்படும் என்றும், அந்த அறிக்கை, சட்டம் மற்றும் அரசியல் சாசனத்திற்குட்பட்டதாக இருக்கும் என்றும், மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.