இலங்கையில் நிகழ்ந்த தொடர் வெடிகுண்டு தாக்குதல் தொடர்பாக, சென்னை பூந்தமல்லியில் தங்கியிருந்த மூவரிடம் தேசிய புலனாய்வு முகமையினர் சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
ஈஸ்டர் நாளன்று இலங்கையில் நிகழ்ந்த தொடர் வெடிகுண்டு தாக்குதலில் 253 பேர் கொல்லப்பட்டனர். 500க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்நிலையில், தேசிய புலனாய்வு பிரிவினர் சென்னை மண்ணடியைச் சேர்ந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் அளித்த தகவலின் பேரில், சென்னை பூந்தமல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இலங்கையைச் சேர்ந்த மூவர் தங்கியிருப்பது தெரியவந்தது. அங்கு விரைந்த போலீஸார், அவர்களிடம் சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பின் அனைவரையும் ஒரு காரில் அழைத்துச் சென்றனர்.
(கோப்புப்படம்)
இலங்கையைச் சேர்ந்தவர்கள் சில மாதங்களுக்கு முன்பு, இந்த குடியிருப்பில் 30 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர். தேசிய புலனாய்வு முகமையினர் அந்த வீட்டில் நடத்திய சோதனையின் போது, முக்கிய ஆவணங்கள், பென் டிரைவ், ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிகிறது. குறிப்பிட்ட வீட்டில் 3 பெண்கள் மற்றும் ஒரு குழந்தையும் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, இந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த தீவிரவாத அமைப்புகள் சதித்திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. எச்சரிக்கையை அடுத்து தமிழகம், கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.