தமிழக அரசு ஜாங்கிட், ஜே.கே. திரிபாதி, காந்திராஜன் ஆகிய 3 ஏடிஜிபிக்களுக்கு டிஜிபிக்களாக பதவி உயர்வு அளித்து உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து மாநில உள்துறை செயலர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பொருளாதாரக் குற்றப் பிரிவு ஏடிஜிபியாக உள்ள ஜாங்கிட், டிஜிபியாக பதவி உயர்த்தப்பட்டு, மாநகர போக்குவரத்துக் கழக தலைமை கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக உள்ள ஜே.கே. திரிபாதி டிஜிபியாக பதவி உயர்த்தப்பட்டு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மாநில மனித உரிமைகள் ஆணைய ஏடிஜிபியாக உள்ள சி.கே. காந்திராஜனுக்கு, டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டு அதே பணியில் தொடர்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலோரப் பாதுகாப்புக் குழுமத்தின் ஏடிஜிபியாக உள்ள தமிழ்ச்செல்வன், தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக் கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு வீட்டு வசதிக் கழகத்தின் தலைவராக உள்ள விஜய்குமார், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதே போன்று, சுனில்குமார் சிங், வன்னிய பெருமாள், கருணாசாகர்,ராஜீவ் குமார், பிரதீப் பிலிப் ஆகிய ஏடிஜிபிக்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சுஜித் குமார், ரோகித் நாதன் ஆகிய இரு ஏஎஸ்பிக்களுக்கு எஸ்பிக்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.