தமிழ்நாடு

தமிழகத்தில் பந்த்: கடைகள் அடைப்பு, அரசு பஸ்கள் ஓடின

தமிழகத்தில் பந்த்: கடைகள் அடைப்பு, அரசு பஸ்கள் ஓடின

webteam

விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் ஈடுபட்ட திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கைதுசெய்யப்பட்டனர்.

விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக அழைப்பு விடுத்துள்ள முழு அடைப்பு ‌போராட்டத்திற்கு காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதையடுத்து தமிழகம் முழுவதும் இன்று காலை முழு அடைப்புப் போராட்டம் தொடங்கியது. பாதுகாப்புக்காக சுமார் 1 லட்சம் போலீசார் களமிறக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். சென்னை சென்ட்ரல், சென்னை எழும்பூர் ரயில் நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதேபோல சென்னையில் மெட்ரோ ரயில் சேவையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அசம்பாவிதங்களை தவிர்க்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தை முன்னிட்டு சென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கோவை உட்பட பல்வேறு நகரங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. கோயம்பேடு காய்கறி மார்கெட் முழுவதுமாக அடைக்கப்பட்டதால் எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் அந்தப் பகுதி வெறிச்சோடி கிடந்தன. சென்னையில் பேரூந்துகள் வழக்கம் போல ஓடியதால் பாதிப்பு ஏற்படவில்லை. சில இடங்களில் பஸ்கள் மீது சிலர் கல்வீசி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்துக்கு ஆதரவாக சினிமா தியேட்டர்களில் இரண்டு காட்சிகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பாக காணப்படும் சத்யம் காம்ப்ளக்ஸ் வளாகம் ஆட்கள் யாருமின்றி அமைதியாக காட்சியளித்தது.

சென்னை பனகல் பார்க் அருகே போராட்டம் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து எதிர்க்கட்சியினருக்கும் போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.