கோடை வெயிலின் சூட்டைத் தணிக்கும் வகையில் தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில், நீலகிரி மாவட்டத்தில் கனமுதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய 12 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் கூறியுள்ளது.
சென்னையை பொறுத்தவரை நகரின் ஒருசில பகுதிகளில் 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 26ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, கர்நாடக கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக்கடலில் 21ஆம் தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும் என்றும், அதே பகுதிகளில் 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.