தமிழகத்தில் இதுவரை டெங்குக் காய்ச்சலுக்கு 18 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசுக்கு, தமிழக அரசு அறிக்கை அனுப்பியுள்ளது.
தமிழகத்தின் டெங்கு பாதிப்பு குறித்தும், டெங்குவால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்தும் தமிழக அரசு, மத்திய அரசிற்கு அறிக்கை சமர்பித்துள்ளது. அந்த அறிக்கையில், 2017 அக்டோபர் 12ஆம் தேதி வரை தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்கள் 18 பேர் என தெரிவித்துள்ளது. இதில் திருப்பூரில் 4 பேரும், ஈரோடு, கோவை, சேலத்தில் தலா 3 பேரும், கரூரில் 2 பேரும், திருச்சி, தருமபுரி, நாமக்கல் மற்றும் சங்கரன்கோவிலில் தலா ஒருவரும் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் டெங்கு காய்ச்சலால் தூத்துக்குடியில் 1,178 பேரும், சென்னையில் 1,138 பேரும், சங்கரன்கோவிலில் 1,072 பேரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கோவையில் 942 பேரும், திருப்பூரில் 782 பேரும், கன்னியாகுமரியில் 777 பேரும் டெங்குவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் இதுவரை 12,324 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.