மருத்துவ மாணவர் சேர்க்கையில் 85 சதவீத உள்ஒதுக்கீடு அரசாணை ரத்தை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
இது தொடர்பாக, தமிழக சுகாதாரத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவில், மருத்துவ மாணவர் சேர்க்கை விவகாரத்தில் தமிழக அரசுக்கு உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தியே அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சட்ட விதிகளைப் பின்பற்றியே தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக அரசு தரப்பு வாதங்களை முழுமையாக ஏற்காமல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே, தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு ஆதரவாக மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள் இணைப்பு மனுவையும் தாக்கல் செய்துள்ளனர். இதேபோல், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவில், தங்கள் தரப்பு வாதங்களைக் கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் பயின்ற சாய் சச்சின் உள்ளிட்ட மாணவர்கள் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர்.