ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட காவல் ஆய்வாளர் பெரிய பாண்டி குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீட்டுத் தொகையை தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொளத்தூரில் நகைக்கடை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க தமிழக போலீசார் ராஜஸ்தான் சென்றிருந்தனர். இந்நிலையில், மதுரவாயல் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் பெரிய பாண்டி சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும், கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில் கொளத்தூர் காவல் ஆய்வாளர் முனிசேகர் படுகாயம் அடைந்தார்.
இந்நிலையில், கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட காவல் ஆய்வாளர் பெரிய பாண்டி குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீட்டுத் தொகையை தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், பெரியபாண்டி மகன்களின் படிப்பு செலவை அரசே ஏற்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த 4 போலீசாருக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்றும் காவலர்களின் மருத்துவ செலவை அரசே ஏற்கும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.