கரூர் உயிரிழப்பு தொடர்பாக, தமிழக அரசு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது.
தவெக தலைவர் விஜய் இன்று மாலை கரூரில் பரப்புரையில் ஈடுபட்ட நிலையில், அவரைக் காண்பதற்காக ஆரம்பம் முதலே தொண்டர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பலருக்கும் மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு அதில் அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
தொடர்ந்து பரப்புரை முடிந்து கூட்டம் கலைந்த நிலையில் மேலும் பலர் மயக்கமடைந்தனர். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பல பேரில், 8 குழந்தைகள், 17 பெண்கள், 11 ஆண்கள் என 36 பேர் உயிரிழந்திருப்பதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது. இது மேலும் உயரக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கப்படும் நிலையில், தமிழக அரசு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது.
முன்னதாக, இந்த விபத்து தொடர்பாக முதல்வர், நாளை கரூர் செல்லவிருந்த நிலையில், இன்று இரவே அங்குச் செல்ல இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
தவிர, இதுதொடர்பாக தற்போது தலைமைச் செயலகத்தில் முதல்வர் தலைமையில் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. அப்போது அடுத்தகட்ட பணிகளைத் துரிதப்படுத்துவது தொடர்பாக முதல்வர் அவர்களிடம் ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே இந்த விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும் கரூர் சம்பவம் குறித்து விசாரிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்துள்ளது.
மேலும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தனது துபாய் பயணத்தை ரத்து செய்துவிட்டு, அவரும் இன்று இரவே கரூருக்குச் செல்லவிருப்பதாகக் கூறப்படுகிறது.