‘டிக் டாக்’ செயலியை தடை செய்ய அரசு ஆராய வேண்டும் என்று சட்டசபையில் தமீமுன் அன்சாரி எம்.எல்.ஏ கோரிக்கை விடுத்துள்ளார்.
வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்று ‘டிக் டாக்’ செயலியை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இளைஞர்கள் என்று மட்டும் இல்லாமல் வயது வித்தியாசங்களை தாண்டி இந்தச் செயலிகளுக்கான வாடிக்கையாளர்கள் கோடிக்கணக்கில் உள்ளனர். ஒரு பாடலையோ, இசையையோ, அல்லது வசனத்தையோ பின்னால் ஓடவிட்டு அதற்கு ஏற்றாற்போல் நடனமாடுவது, வசனம் பேசுவது, நடித்து காட்டுவது போன்றவற்றை இந்தச் செயலி மூலம் செய்யலாம்.
ஒரு பொழுதுபோக்கு அம்சம் என்பதையும் தாண்டி, அதற்கு பலரும் அடிமையாகி வருகின்றனர். மேலும், ஆபாசமான வீடியோக்கள் பலவும் இதில் உலாவுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், பல்வேறு ஆபாச செயலுக்கும், சட்டம் ஒழுங்கு பிரச்னைகளுக்கும் வழிவகுப்பதால் ‘டிக் டாக்’ செயலியை தடை செய்ய அரசு ஆராய வேண்டும் என தமீமுன் அன்சாரி சட்டசபையில் கோரிக்கை விடுத்துள்ளார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் மணிகண்டன் ‘டிக் டாக்’ செயலியை தடை செய்வது குறித்து மத்திய அரசிற்கு பரிந்துரை செய்யப்படும் என்று தெரிவித்தார்.
ஃப்ளூவேலியைப் போல் ‘டிக் டாக்’ செயலியை தடை செய்ய வலியுறுத்துவோம் என்று அவர் கூறினார்.