தமிழ்நாடு

வெங்காயத்தின் விலை 3 நாட்களில் குறையும் - தமிழக அரசு 

webteam

வெங்காயத்தின் விலை இன்னும் 2 அல்லது  3 நாட்களில் குறையும் என தமிழக அரசு உறுதி அளித்துள்ளது. 

வெங்காயம் அதிகம் விளையும் மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கனமழை காரணமாக விளைச்சல் குறைந்ததால் அதன் விலை கணிசமாக அதிகரித்துள்ளது‌. டெல்லியில் ஒரு கிலோ வெங்காயம் 70 முதல் 80 ரூபாய் வரையிலும், சென்னையில் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 

சென்னையில் கடந்த வாரம் 35 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது 60 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. வெங்காய விலை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது மக்களுக்கு கூடுதல் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், வெங்காயத்தின் விலை இன்னும் 2 அல்லது  3 நாட்களில் குறையும் என தமிழக அரசு உறுதி அளித்துள்ளது. மேலும், “நாசிக் மற்றும் ஆந்திராவில் இருந்து அதிக அளவில் வெங்காயம் கோயம்பேடுக்கு வர தொடங்கியுள்ளன. வெங்காயம் பதுக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெங்காய விலை தொடர்பான நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். விலை கட்டுப்பாட்டு நிலயம் மூலம் வெங்காயத்தை கொள்முதல் செய்ய முதல்வரின் உத்தரவு பெறப்படும். எங்கும் பதுக்கல் இல்லாமல் பொதுமக்களுக்கு சிரமமின்றி கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.” எனத் தெரிவித்துள்ளது.