சன் பார்மா மருந்து தயாரிப்பு நிறுவனத்தை விரிவாக்கம் செய்ய தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர் வெண்ணிலா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மருந்து நிறுவனத்திற்காக வேடந்தாங்கல் சரணாலயத்தின் பரப்பளவு குறைக்கப்படுகிறது எனவும் இதனால் அங்கு உணவுக்காக வரும் பறவைகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த தமிழக அரசு சன் பார்மா நிறுவனம் மத்திய சுற்றுச்சூழல் அனுமதி பெற்றிருந்தாலும், மத்திய வனவிலங்கு பாதுகாப்பு ஒப்புதல் நிராகரிக்கப்பட்டுள்ளதால் தொழிற்சாலை விரிவாக்கம் செய்ய கடந்த மாதம் அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது எனவும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பரப்பு 5 கி.மீ ரேடியஸ் என்பதை 3 கி.மீட்டராக குறைக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வேடந்தாங்கல் நிலபரப்பு குறைக்கபடுவதற்கு எதிராக மனுதாரர் புதிய மனு அளித்து நிவாரணம் பெற்று கொள்ளலாம் என நீதிபதிகள் கருத்து தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.