தேர்தல் பரப்புரையின் போது கோடநாடு விவகாரம் பற்றி ஸ்டாலின் பேச தடை கோரி தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.
தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதற்காக, அனைத்து அரசியல் கட்சியினரும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் பரப்புரையின் போது, ஆளும் கட்சியினர் எதிர்கட்சியினர் மீதும், எதிர்க்கட்சியினர் ஆளும் கட்சியினர் மீதும் சரமாரியான குற்றச்சாட்டுக்களை கூறி வருகின்றனர்.
இந்த வகையில், கோடநாடு கொலை மற்றும் கொள்ளை விவகாரத்தைச் சுட்டிக்காட்டி ஆளும் அதிமுக மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார். இந்நிலையில், தேர்தல் பரப்புரையின் போது, கோடநாடு விவகாரம் பற்றி ஸ்டாலின் பேச தடை விதிக்கக் கோரி தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கு நீதிபதி இளந்தரயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் மனு குறித்து மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 3 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டார். அத்துடன், இந்த அவதூறு வழக்கு நிலுவையில் இருப்பதால் பரப்புரையின் போது ஸ்டாலின் கோடநாடு விவகாரம் குறித்து பேசுவதை தவிர்க்க வேண்டும் என்று நீதிபதி தெரிவித்தார்.