சென்னையில் வனப்பகுதிகளில் அல்லாத பகுதிகளில் வசிக்கும் மான்களை பாதுகாக்கும் நோக்குடனே அவை இடமாற்றம் செய்யப்படுவதாக தமிழக வனத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்துள்ளது.
சென்னை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ராஜ்பவன், கிண்டி சிறுவர் பூங்கா, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் போன்ற வளாகங்களில் உள்ள 1500 மான்களின் நலனை கருத்தில் கொண்டு அவற்றை வேறு இடத்திற்கு மாற்ற தமிழக வனத்துறை நடவடிக்கை எடுத்தது. இதனையடுத்து, மான்களை பிடிக்கவும், வேறு இடத்திற்கு இடம் மாற்றம் செய்யவும் தடை விதிக்கக்கோரி சென்னையை சேர்ந்த முரளிதரன் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில், தமிழக வனத்துறை முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சஞ்சய் குமார் ஸ்ரீவத்சவா பதில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், மனுதாரர் குறிப்பிடும் பகுதிகளில் கட்டுமானங்கள் அதிகரித்து வருவதாலும், ஒரே இடத்தில் சிக்கும் மான்கள் உயிரிழப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், நாய்கள் கடிப்பதாலும், வாகனங்களில் மோதுவதாலும், சில நேரங்களில் மான்கள் வேட்டையாடப்படுவதாலும் மான்கள் பாதிப்புக்கு உள்ளாவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதவிர கழிவு நீரை குடிப்பதால் மான்கள் உயிரிழப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
மான்களுக்கு ஏற்படும் பாதிப்பையும், இறப்பை தவிர்க்கவுமே, பாதுகாக்கபட்ட இயற்கையான சூழலுக்காக காப்பு காடுகளிலும், தேசிய பூங்காக்களிலும் மான்கள் விடப்படுவதாக பதில் மனுவில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற காரணங்களால் சென்னை நகருக்குள் மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் 497 புள்ளி மான்கள் இறந்துள்ளதை பதில்மனுவில் குறிப்பிட்டுள்ளதுடன், மாற்று இடத்திற்கு போகும்போது துன்புறுத்தல் இல்லாமல் இடமாற்றம் செய்யப்படுவதாகவும், அதற்கு முன்பாக கிண்டியில் 15 நாள் பரிசோதனையில் வைக்கபட்டு, அதன் பின்னரே மான் பாதுகாப்பான இடமாற்ற விதிகளின் படியே இடமாற்றம் செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுதாரர் முரளிதரன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும் பதில் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.