தமிழ்நாடு

"சீனிக்கு பதில் வெல்லத்தை மக்களுக்கு அரசு வழங்க வேண்டும்”- வெல்ல உற்பத்தியாளர்கள் கோரிக்கை

webteam

ஓணம் பண்டிகையையொட்டி கேரள அரசு மக்களுக்கு இலவசமாக வெல்லத்தை அளித்ததுபோல், பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசும் மக்களுக்கு சீனிக்கு பதிலாக வெல்லத்தை அளிக்க வேண்டும் என வெல்ல உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தேனி மாவட்டம் லட்சுமிபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ளப்பகுதியில் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வெல்ல உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் உற்பத்தி செய்யும் வெல்லமானது கேரளா,விருதுநகர், மற்றும் மதுரை உள்ளிட்டப் பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

கேரள பண்டிகைகளின்போது அதிகப்படியாக ஏற்றுமதியாகும் இந்த வெல்லமானாது, இந்த ஆண்டில் கொரோனா பாதிப்பு காரணமாக பாதியாகக் குறைந்தது. இதானல் வெல்லத்தின் விலையும் கடுமையாக குறைந்தது. இந்நிலையில் ஓணம் பண்டிகையையொட்டி கேரள அரசு உற்பத்தியாளர்களிடம் இருந்து வெல்லங்களை பெற்று மக்களுக்கு இலவசமாக வழங்கியது. இதனால் வெல்லத்தின் விலை மீண்டும் அதிகரித்தது.

இதனையடுத்து மீண்டும் வெல்ல ஏற்றுமதி குறைந்துள்ள நிலையில் தற்போது அதன் விலை குறையத் தொடங்கியுள்ளது. இதனால் கேரள அரசு மக்களுக்கு இலவசமாக  வெல்லத்தை வழங்கியதுபோல், பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசும் மக்களுக்கு சீனிக்குப் பதிலாக வெல்லத்தை அளிக்க வேண்டும் என வெல்ல உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.