அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கையால் நகைகள் வாங்குவதை பெரும்பாலானோர் வழக்கமாக கொண்டுள்ளனர். இதையடுத்து, நேற்று அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் பல நகைக் கடைகளில் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளும் வழங்கப்பட்டன. இதனால் சிறு சிறு நகைக் கடைகள் முதல் பெரிய பெரிய நகைக் கடைகள் வரை கூட்டம் அலைமோதியது. நள்ளிரவு வரை பல நகைக் கடைகளில் விற்பனை நடைபெற்றது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 20 விழுக்காடு விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்த்த நிலையில், கடந்த ஆண்டைப் போலவே சுமார் 14 ஆயிரம் கோடி ரூபாய்க்கே தங்க நகைகள் விற்பனையானதாக தங்கம் மற்றும் வைர நகை விற்பனையாளர்கள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி தெரிவித்துள்ளார்.
மறுபுறம், இந்தியாவின் தங்கம் தேவை ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை 15 சதவீதம் குறைந்துள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. நடப்பாண்டின் ஜனவரி முதல் மார்ச் வரை, தேவை 118.1 டன்னாக இருந்தது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் தேவை 139 டன்களாக இருந்ததாக உலக தங்க கவுன்சில் கூறியுள்ளது. தங்கம் விலை உயர்ந்ததைத் தொடர்ந்து தேவை குறைந்திருப்பதாக உலக தங்க கவுன்சில் கூறியுள்ளது. அதேநேரம், மதிப்பின் அடிப்படையில் தங்கம் விலை 22 சதவீதம் உயர்ந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்கம் தேவை 700 முதல் 800 டன்களாக இருக்கும் எனவும் உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.