தமிழ்நாடு

ஊரக உள்ளாட்சி தேர்தலில் புறக்கணிக்கப்படுவதாக திமுக மீது காங். குற்றச்சாட்டு - கூட்டணியில் பிளவா?

ஊரக உள்ளாட்சி தேர்தலில் புறக்கணிக்கப்படுவதாக திமுக மீது காங். குற்றச்சாட்டு - கூட்டணியில் பிளவா?

webteam

ஊரக உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி தர்மத்திற்கு புறம்பாக திமுக செயல்படுகிறது என தமிழக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் கே.ஆர். ராமசாமி மற்றும் அக்கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஊரக உள்ளாட்சி தேர்தலில் தொடக்கத்திலிருந்து எந்த ஒப்பந்தமும் இல்லாமல் மாவட்ட அளவில் பேசி முடிவெடுப்பதென தீர்மானிக்கப்பட்டது. ஆனால் அந்த முயற்சிகளுக்கு மாவட்ட அளவில் எந்த ஒத்துழைப்பு இதுவரை கிடைக்கவில்லை.

திமுக தலைமையிலிருந்து அறிவுறுத்தப்பட்ட இடங்களில் கூட காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. 303 ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பதவிகளில் இதுவரை 2 இடங்களில் மட்டும் திமுக தலைமையால் வழங்கப்பட்டுள்ளது.

27 மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிகளில் ஒரு மாவட்ட ஊராட்சி தலைவர் பதவியோ, துணைத்தலைவர் பதவியோ இதுவரை வழங்கப்படவில்லை. இது கூட்டணி தர்மத்திற்கு புறம்பானது என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, 27 மாவட்டங்களுக்கு நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி கட்சி அதிமுகவை விட கூடுதலாக ஒன்றிய மற்றும் மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் வெற்றிப் பெற்றது.