cm stalin pt desk
தமிழ்நாடு

வரும் நாடாளுமன்ற தேர்தல் நமக்கான தேர்தல் அல்ல நாட்டுக்கான தேர்தல் - முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

“ஆளுநர் செய்யும் சித்து விளையாட்டுகளை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்; அடுத்த ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தல் நாட்டுக்கான தேர்தல்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

webteam

சென்னை புளியந்தோப்பில் கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த பொதுக் கூட்டத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது பேசிய அவர்...

“கலைஞர் நூற்றாண்டு விழாவை ஜூன் 3 ஆம் தேதி கொண்டாட ஏற்பாடு செய்தோம். ஆனால், ஓடிசா விபத்து காரணமாக பல்வேறு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. இப்படி செய்ததை அவரும் விரும்பியிருப்பார். இந்த நூற்றாண்டு விழா அடுத்த ஆண்டு ஜூன் 3 ஆம் தேதி வரை கொண்டாடப்படும். இன்னும் 5 ஆண்டுகள் கலைஞர் வாழ்ந்திருந்தால் நடு நாயகனாக இதே மேடையில் அவர் அமர்ந்திருப்பார்.

cm stalin

அவர், நம்மை விட்டு பிரிந்துவிட்டார் என்று சொல்வதை விட அவர் நம்மை என்றும் கண்காணித்துக் கொண்டிருப்பார் என்றே நான் எண்ணிக் கொள்வேன். இந்நிகழ்ச்சியை நான் எதிர்பார்த்ததை விட மிக சிறப்பாக நடத்தி காட்டி இருக்கிறார் ‘செயல்’ பாபு. செயல் பாபு என்று சொல்லக் கூடிய அமைச்சர் சேகர் பாபு, மற்றும் இதை செய்தவர்களுக்கு தனிப்பட்ட முறையில் எனது வாழ்த்துகளை சொல்லிக் கொள்கிறேன்.

இந்த கொண்டாட்டத்தின் மூலம் கலைஞருக்கு புதிய புகழை சேர்க்கப் போகிறோம் என்றல்ல. நன்றியின் அடையாளமாக இந்த விழா நடந்து வருகிறது. கலைஞரின் ஆட்சியே சாமானியர்களுக்கான ஆட்சி தான். திமுகவின் ஆட்சி, ஏழை எளிய மக்கள் பயன்பெறும் ஆட்சியாக தான் இருக்கும்.

cm stalin

திராவிடம் என்ற சொல்லைப் பார்த்து இன்று சிலர் பயப்படுகிறார்கள். கண்ணை மூடிக்கொண்டு விதண்டாவாதம் செய்துக் கொண்டிருக்கிறார்கள். திராவிட மாடலை செய்து காட்டுவேன் என்ற தன்னம்பிக்கை கொண்டவன் நான். இந்த தன்னம்பிக்கையை என்னுள் ஊட்டியவர் அவர், நான் அவரின் கொள்கை வாரிசு. கருத்தியலின் தலைவராக கருணாநிதி இருந்தார். திராவிட மாடல் ஆட்சிக்கு அடித்தளமிட்டவர் கருணாநிதி.

கன்னியாகுமரி தொடங்கி கும்மிடிப்பூண்டி வரை கருணாநிதியின் கால்படாத இடமில்லை. சந்திக்காத மனிதர்கள் இல்லை, தொடங்காத திட்டமில்லை, உருகாத உடன்பிறப்புகள் இல்லை! ஆகஸ்ட் 7ஆம் தேதி, சென்னை மெரினா கடற்கரையில் கலைஞர் நினைவகம் திறந்து வைக்கப்படும்.

வரும் நாடாளுமன்ற தேர்தல், யார் ஆட்சி அமையக் கூடாது என்பதை தீர்மானிக்கும் தேர்தலாக இருக்க வேண்டும். இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய கட்சிகள் பாஜகவை வீழ்த்த ஒன்று சேர வேண்டும். ‘வரும் 23 ஆம் தேதி நீங்கள் பீகார் வர வேண்டும்’ என நிதிஷ் குமார் சொல்லி இருக்கிறார். அகில இந்திய அளவில் ஒரு கூட்டனியை அமைக்க வேண்டும் என்று என்னிடம் தொலைபேசியில் கூறினார்.

PM Modi

எத்தகைய பொய்யையும் பாஜகவினர் சொல்ல பயப்பட மாட்டார்கள். தமிழக ஆளுநர் செய்து கொண்டிருக்கிற சித்து விளையாட்டை பார்த்துக் கொண்டு இருக்கிறோம்... பொறுத்தது போதும், பொங்கி எழுவோம்.. வரும் நாடாளுமன்ற தேர்தல்... நமக்கான தேர்தல் அல்ல நாட்டுக்கான தேர்தல்” என்றார்

முதல்வரின் பேச்சை காணொலியில் செய்தியில் கீழ்வரும் வீடியோவிலும் காணலாம்.