தமிழ்நாடு

போராட்டம் தொடர்கிறது: முதல்வரின் வேண்டுகோள் நிராகரிப்பு

webteam

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைக் கைவிடுமாறு முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் விடுத்த வேண்டுகோளை ஏற்றுக் கொள்ள போராட்டக்காரர்கள் மறுத்து விட்டனர்.

முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நாளை பிரதமரைச் சந்தித்து அவசரச் சட்டம் தொடர்பாக வலியுறுத்தப் போவதாக அறிக்கை வெளியிட்டிருந்தார். மேலும் போராட்டத்தைக் கைவிடுமாறு அன்போடு கேட்டுக் கொள்வதாகவும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த அறிக்கையை மெரினாவில் போராட்டம் நடத்தி வரும் ஆயிரக்கணக்கானோர் மத்தியில் காவல்துறையினர் ஒலிபெருக்கியில் வாசித்துக் காட்டினர்.

அதைக் கேட்ட பின் போராட்டம் நடத்தும் இளைஞர்கள் தங்களது கோரிக்கை நிறைவேறும் வரையில் போராட்டம் தொடரும் எனக் கூறினர். அவர்கள் முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் நாளை பிரதமரை முதலமைச்சர் சந்தித்த பின் தமிழகத்திற்கு சாதகமான முடிவு வரும் வரையில் போராட்டத்தைக் கைவிட மாட்டோம் எனவும் கூறினர்.

இதே போல் அலங்காநல்லூரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களும் தங்களது கோரிக்கை நிறைவேற வேண்டும் எனவும் ஜல்லிக்கட்டு நடக்கும் வரையில் தங்களது போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை எனவும் தெரிவித்தனர்.