தமிழ்நாடு

“மழை பொய்த்தாலும் முடிந்த அளவு தண்ணீர் விநியோகம்” - முதல்வர் பதில்

“மழை பொய்த்தாலும் முடிந்த அளவு தண்ணீர் விநியோகம்” - முதல்வர் பதில்

rajakannan

தமிழகத்தில் மழை பொய்த்துவிட்டாலும், முடிந்த அளவு தண்ணீர் விநியோகிக்கிறோம் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் குடிநீர் பிரச்னை குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். அப்போது, 66 சதவீத பருவமழை பொய்த்தும் குடிநீர் பிரச்னை தீர எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை என்றும் குடிமராமத்துப் பணிகளும் தோல்வி அடைந்துள்ளதாகவும் ஸ்டாலின் தமிழக அரசினை விமர்சித்தார். 

இதனையடுத்து தண்ணீர் பிரச்னை குறித்து சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் பழனிசாமி, “மழை பொய்த்துவிட்டது, நிலத்தடி நீர் கீழே சென்றுவிட்டது. இருந்த போதிலும் தமிழக அரசால் முடிந்தவரை தண்ணீர் விநியோகித்து வருகிறோம்” என்று தெரிவித்தார். 

மேலும், “தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நீர் பிரச்சனையில் உள்ளது. சட்டத்தில் மூலம் காவிரி ஆணையம் அமைக்கும் தீர்ப்பை பெற்றோம்,  ஆனால் ஆணையம் கலைக்கப்படும் என ராகுல் காந்தி பேசியுள்ளார். ராகுல் காந்தியின் இந்தப் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு குரல் கொடுத்தீர்களா?" என காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு முதல்வர் கேள்வி எழுப்பினார்.

மேலும், “உங்கள் கூட்டணியிலுள்ள காங்கிரஸ் கட்சிதான் கர்நாடகாவில் ஆட்சியில் உள்ளது. இதுவரை நமக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் தரவில்லை. அதற்கு ஏதாவது அழுத்தம் கொடுத்தீர்களா?” எனவும் முதல்வர் கேள்வி எழுப்பினார்.

இதனையடுத்து, “காவிரி நீரை கொண்டு வர வேண்டியது ஆளும் கட்சியின் பொறுப்பு, எதிர்க்கட்சியை குற்றம் சாட்டுவது சரியல்ல” என காங்கிரஸ் சட்டப்பேரவை தலைவர் ராமசாமி கூறினார்.