வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பிரதமரின் பயிர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயிர் காப்பீட்டு இழப்பீடு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முதற்கட்டமாக 30 விவசாயிகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி இழப்பீட்டை வழங்கினார். 2016-17ஆம் ஆண்டில் 15 லட்சத்து 37 ஆயிரம் பேர் பயிர்க்காப்பீடு செய்துள்ளதாகவும், 32 லட்சத்து 23 ஆயிரம் ஏக்கருக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது. இந்த ஆண்டில் விவசாயிகள் 120 கோடி ரூபாய் காப்பீடு தொகை செலுத்தியுள்ளதாகவும், தமிழக அரசு சார்பில் 412 கோடி ரூபாய் மானியம் செலுத்தப்பட்டுள்ளதாவும் கூறப்பட்டது. தகுதியுள்ள பயனாளிகளுக்கு அடுத்த இரண்டு மாதங்களில் காப்பீட்டு இழப்பீடு தொகை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு தொகை தமிழக அரசால் வழங்கப்பட்டு வரும் நிலையில், காப்பீடும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.