ஆங்கிலேயர் ஆட்சி காலம் தொடங்கி தற்போது வரை தமிழகத்தின் முதலமைச்சர்களாக பதவி வகித்தவர்கள் யார் யார் என்பதை விரிவாக பார்க்கலாம்.
தமிழ்நாடாக இல்லாமல் மதராஸ் மாகாணமாக இருந்த போது 1920ஆம் ஆண்டு சட்டமேலவைத் தலைவராக ஏ.சுப்பராயலு தேர்வு செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து பனகல் ராஜா, பி.டி.ராஜன், ராஜாஜி, ஓமந்தூரார் ராமசாமி ரெட்டியார், குமாரசாமி ராஜா உள்ளிட்டோர் சென்னை மாகாண சட்ட மேலவைத் தலைவர்களாக பதவி வகித்தனர்.
தமிழகத்தில் பொது வாக்களிப்பு உரிமையின் அடிப்படையில் தேர்தல் முதல்முறையாக 1952ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழகத்தின் முதல் முதலமைச்சராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜாஜி என்று அழைக்கப்படும் சி.ராஜகோபாலாச்சாரி பதவி ஏற்றார். தமிழகத்தின் இரண்டாவது முதலமைச்சர், கல்விக் கண் திறந்தவர் என்று இன்றவும் போற்றப்படும் காங்கிஸ் கட்சியை சேர்ந்த காமராஜர். அவர் தொடர்ந்து 9 ஆண்டுகள் 172 நாட்கள் பதவியில் இருந்தார்.
காமராஜரை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பக்தவத்சலம் முதலமைச்சராக பதவி வகித்தார். அவரைத் தொடர்ந்து 1967 முதல் 1969 வரை பேரறிஞர் அண்ணா தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தார். அப்போது தான் முதல்முறையாக திமுக ஆட்சிக்கு வந்தது. சென்னை மாகாணம் 1969 ஜனவரி 14ஆம் தேதி தமிழ்நாடு என்று பெயர்மாற்றப்பட்டது. முதலமைச்சராக இருக்கும் போதே பேரறிஞர் அண்ணா காலமானார். எனவே இரா.நெடுஞ்செழியன் 5 நாட்கள் முதல்வராக பதவி வகித்தார். அவரைத் தொடர்ந்து 1969 பிப்ரவரி 10ஆம் தேதி அப்போதைய திமுக தலைவர்மு.கருணாநிதி முதல்வராக பதவி ஏற்றார்.
இந்நிலையில் நாடாளுமன்றத்தில் இந்திரா காந்தி கொண்டு வந்த மன்னர் மானிய ஒழிப்பு மசோதா தோல்வி அடைந்ததை அடுத்து, அவர் ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க முடிவு செய்தார். எனவே, நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து சட்டமன்ற தேர்தலை சந்திக்க முடிவு செய்த திமுக, ஆட்சியை கலைப்பதாக ஆளுநரிடம் தெரிவித்தது. அதனால் 68 நாட்கள் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. மு.கருணாநிதி மீண்டும் முதலமைச்சர் ஆனார். 1971 முதல் 1976 வரை ஆட்சி நடத்தினார். நாட்டில் அவசர நிலை பிரகடனத்தை அடுத்து திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. 514 நாட்கள் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெற்றது.
அதற்கு பிறகு திமுகவில் இருந்து பிரிந்து சென்று அதிமுகவை தொடங்கிய எம்ஜிஆர் 1977-ல் முதல்வர் ஆனார். 1980-ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கடும் தோல்வியை சந்தித்ததால், மக்களவைத் தேர்தலில் தோற்றுப்போன கட்சி, மாநிலத்தை ஆளும் உரிமையை இழந்துவிட்டது என்று கூறி, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி ஆட்சியை கலைத்தார். ஆனால் அதற்கு பிறகு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் எம்.ஜி.ஆர் முதல்வர் ஆனார்.
1984ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் எம்ஜிஆருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, இடைக்கால முதல்வராக இரா.நெடுஞ்செழியன் 85 நாட்கள் பதவி வகித்தார். இந்திரா காந்தியின் மரணத்தை அடுத்து மத்தியில் ஆட்சி கலைக்கப்பட்டது. அதே போல் தமிழகத்திலும் ஆட்சி கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டது. அந்த தேர்தலில் எம்ஜிஆர் அமெரிக்காவில் இருந்தவாறே வெற்றி பெற்றார்.
1985ஆம் ஆண்டு முதலமைச்சராக பதவியேற்ற அவர், 1987ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி பதவியில் இருக்கும் போது காலமானார். அவரைத் தொடர்ந்து 12 நாட்கள் இரா.நெடுஞ்செழியனும், 23 நாட்கள் ஜானகி ராமச்சந்திரனும் முதலமைச்சர்களாக பதவி வகித்தனர். அதிமுக இரு அணிகளாக பிரிந்த நிலையில், ஜானகி ராமச்சந்திரன் பெரும்பான்மையை நிரூபிக்கும் நாளன்று சட்டமன்றத்தில் பிரச்னை ஏற்பட்டதால் ஆட்சி கலைக்கப்பட்டது. 1988இல் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
1989இல் திமுக வெற்றி பெற்றதை அடுத்து அக்கட்சியின், அப்போதைய தலைவர் மு.கருணாநிதி முதலமைச்சர் ஆனார். சந்திரசேகர் பிரதமராக இருந்த போது, 1991இல் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி ஆட்சியை கலைக்க வேண்டுமென வலியுறுத்தின. இதனையடுத்து திமுக ஆட்சி கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டது. அதில் ஜெயலலிதா வெற்றி பெற்றார். அவர் 1996 வரை முதல்வராக பதவி வகித்தார். 1996 தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. மு.கருணாநிதி முதல்வராக பதவி ஏற்றார்.
2001 சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதாவின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ஏனென்றால், டான்சி வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பளித்திருந்தது சிறப்பு நீதிமன்றம். ஆனாலும் அப்போது அதிமுக வெற்றி பெற்றதால் ஜெயலலிதா முதல்வராத பதவி ஏற்றார். 130 நாட்கள் பதவியில் இருந்தார். ஆனால் பொதுநல வழக்கில், ஜெயலலிதாவின் பதவிப்பிரமாணம் செல்லாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது தான் முதல்முதலாக ஓ.பன்னீர்செல்வத்துக்கு முதல்வர் பதவி வழங்கப்பட்டது. 160 நாட்கள் முதல்வராக இருந்தார்.
டான்சி வழக்கின் மேல் முறையீட்டில் விடுதலை செய்யப்பட்டதை அடுத்து, ஆண்டிப்பட்டி தொகுதியில் வெற்றி பெற்று முதல்வரானார் ஜெயலலிதா. அதனைத் தொடர்ந்து 2006ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. மு.கருணாநிதி முதலமைச்சராக பதவி ஏற்றார். 2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஜெயலலிதா முதல்வரானார். 2014ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியானதை அடுத்து ஜெயலலிதா சிறை செல்ல நேரிட்டதால், இடைக்கால முதல்வராக 2014 செப்டம்பர் 29ஆம் தேதி ஓ.பன்னீர்செல்வம் பதவி ஏற்றார்.
சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரை கர்நாடகா உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது. அப்போது ஆர்.கே.நகரில் வெற்றி பெற்று ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சரானார். 2016 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் ஆர்.கே.நகரில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜெயலலிதா முதலமைச்சராக பதவி ஏற்றார். ஆனால் அவர் உடல்நலக்குறைவால் மறைந்ததை அடுத்து 2016 டிசம்பர் 6ஆம் தேதி ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பதவி ஏற்றார்.
அவரைத் தொடர்ந்து 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் எடப்பாடி பழனிசாமி தமிழக முதலமைச்சராக முதல் முறையாக பதவியேற்றுக் கொண்டார். அவர் நான்கு ஆண்டுகள் நிறைவு செய்ததை அடுத்து, 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து மே 7ஆம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார்.