தமிழகத்தின் முதல்வராகப் பதவியேற்ற விஜய், தேர்தல் வாக்குறுதிகளில் கூறியபடி, முதல் கையெழுத்தாக 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் உள்ளிட்ட கோப்புகளில் கையெழுத்திட்டார். அதைத் தொடர்ந்து அவர் உரையாற்றினார்.
தவெக ஆட்சியமைப்பதற்கு பெரும்பான்மை கிடைத்ததைத் தொடர்ந்து, சென்னை ராஜா முத்தையா சாலையில் அமைந்துள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் விஜய் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் இன்று நடைபெற்றது. அவருக்கு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் முதலில் பதவிப் பிரமாணமும், அதன்பிறகு ரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார். ’சி.ஜோசப் விஜய் எனும் நான்’ என்று தொடங்கி பதவியேற்றுக் கொண்ட அவர், ஆண்டவன் மீது ஆணையாக உறுதியேற்கிறேன் எனத் தெரிவித்தார்.
முதலமைச்சரான பின்பு விஜய் 3 முக்கியக் கோப்புகளில் கையெழுத்திட்டார். அதன்படி, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்கம், 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம், போதைப்பொருள் தடுப்பு படை உருவாக்கம் உள்ளிட்ட கோப்புகளில் விஜய் கையெழுத்திட்டார். பின்னர் முதல்வராகி முதல் உரையாற்றிய விஜய், “நான் ஒன்றும் தேவதூதன் அல்ல; சாதாரணமான ஒரு வாழ்க்கையை வாழும் சாதாரண மனிதன். நான் ஒன்றும் மன்னர் பரம்பரையில் இருந்து வந்தவன் அல்ல. சினிமாவில் எனக்கு மிகப்பெரிய ஓர் இடத்தை நீங்கள்தான் கொடுத்தீர்கள். உங்களுக்கு நன்றிக்கடன் செலுத்த வந்த என்னை குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஏற்றுக் கொண்டீர்கள்.
இத்தனை கோடி மக்கள் என்னுடன் இருக்கும்போது எது வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற உறுதி வருகிறது. எனக்கு எவ்வளவோ அவமானங்கள், கஷ்டங்கள் வந்தாலும் அதை எல்லாம் உங்கள் கஷ்டங்களாக எடுத்துக் கொண்டீர்கள். என் அரசில் ஒரே அதிகாரம்தான்... பல அதிகார மையங்கள் எல்லாம் இருக்காது. நான் மட்டுமே அதிகார மையம்; வேறு யாரும் அல்ல. எனது ஆட்சியில் ஜெயித்துவிட்டோம் என்று ஆட்டம் ஆடிப் பார்க்கலாம் என யாரும் நினைக்க வேண்டாம். என் அரசில் யார் தவறு செய்தாலும் விடமாட்டேன்.
ஆட்டம் ஆடுவோம் என நினைத்தால் அந்த எண்ணத்தை இந்த நிமிடமே அழித்துவிடுங்கள். எல்லோரும் சேர்ந்து புதிய ஆட்சியைத் தருவோம். மக்கள் பணத்தில் ஒரு பைசாகூட தொட மாட்டேன். முன்பு இருந்த அரசு கஜானாவை சுத்தமாகக் காலி செய்துவிட்டு சென்றுவிட்டனர். கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். போதைப் பொருள் விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சட்டம் ஒழுங்கு பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். மருத்துவம், குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளில்தான் முழுக் கவனம் செலுத்துவேன்” என்றார்.