கரூரில் பாஜக சார்பில் மாற்றத்துக்கான மாநாடு நேற்று நடைபெற்றது. இதில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அதைத் தொடர்ந்து அங்கு பேசிய அவர்,
“கரூர் மாவட்ட எஸ்.பி மற்றும் ஆட்சியர், கரூர் மாவட்ட திமுக செயலாளர்களாக செயல்படுகின்றனர். கரூர் மாவட்ட திமுக மாவட்ட செயலாளர் சிறையில் இருப்பதால் அந்த இடத்தை பிடிக்க இருவரும் முயல்கின்றனர். இதை விட்டுவிட்டு மக்களுக்கு சேவை செய்யுங்கள். உச்ச நீதிமன்றத்தில் இருமுறை உத்தரவு போட்டும் செந்தில்பாலாஜி மீது ஏன் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை? கரூர் மாவட்டத்தில் திமுக அழியும் நிலைக்கு வந்துவிட்டது.
உலகில் நம்பர் 1 பிரதமர் என்ற தகுதியை பெற்றுவிட்டார் மோடி. இந்தியாவில் 100 பேரிடம் சர்வே எடுத்தால் அதில், 78 பேர் மோடியை பிடிக்கும் என்கின்றனர். தன்னை நம்பர் 1 முதல்வர் என்கிறார் ஸ்டாலின். ஆனால் 14 ஆண்டுகள் கள்ளச்சாராய சாவுகள் இல்லாத தமிழகத்தில் 22 சாராய சாவுகளை ஏற்படுத்தியது, இந்தியாவின் கஞ்சா தலைநகரமாக தமிழகத்தை மாற்றியது ஆகியவற்றில்தான் ஸ்டாலின் நம்பர் 1 முதல்வராக உள்ளார்.
கர்நாடகாவில் நடைபெறவுள்ள எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளாராம். ஸ்டாலின் அந்த கூட்டத்தை புறக்கணிக்க வேண்டும். கர்நாடகாவில் பாஜக ஆட்சியின்போது காவிரியில் இருந்து தண்ணீர் தட்டுப்பாடின்றி வந்தது. இப்போது கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் காவிரியில் இருந்து ஒரு சொட்டு தண்ணீர் கூட விடமாட்டோம் என்கிறார். அந்த கர்நாடக மாநிலத்தில் நடக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள ஸ்டாலின் செல்கிறார்” என்றார்.
இதைத்தொடர்ந்து இன்று சிதம்பரம் தீட்சிதர்களுக்கு ஆதரவாகவும் தமிழ்நாடு அரசை எதிர்த்தும் கருத்து தெரிவித்துள்ளார். அண்ணாமலை. இதுபற்றி தமிழ்நாடு பாஜகவின் ட்விட்டர் பக்கத்தில், “மாநில அரசு தீட்சிதர்கள் விஷயத்தில் அவர்களுக்கு தொந்தரவு கொடுக்கக் கூடாது. அப்படி தொந்தரவு கொடுத்தால் நானே அங்கு சென்று போராடுவேன்” என்று அண்ணாமலையின் பெயரில் கருத்து பகிரப்பட்டுள்ளது