தமிழ்நாடு அரசு நடத்திய கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, திரைப்பிரபலங்களான நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.
தமிழக அரசு சார்பில் ’கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்ற நிகழ்ச்சி நேற்று (செப்டம்பர் 25) சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்சிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தெங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மற்றும் தமிழ்நாடு அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழக அரசு கல்விக்காகச் செயல்படுத்தி வரும் திட்டங்களான காலை உணவுத்திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், புதுமைப் பெண் திட்டம் உள்ளிட்ட 7 திட்டங்கள் பற்றிய சாதனைகளை விளக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும், இந்த நிகழ்ச்சியில், 2025-2026ஆம் கல்வி ஆண்டிற்கான தமிழ்ப் புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டங்களையும் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி இருவரும் இணைந்து தொடங்கி வைத்தனர்.
மேலும், இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர்கள் தியாகராஜன் குமாரராஜா, மிஷ்கின், வெற்றிமாறன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டு கல்வியின் அவசியத்தையும், தமிழக அரசு கல்விக்காக முன்னெடுத்திருக்கும் காலை உணவுத்திட்டம், புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட திட்டங்களப் பற்றியும் பாராட்டிப் பேசினர். தொடர்ந்து, நான் முதல்வன் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், புதுமைப் பெண் திட்டம் உள்ளிட்ட திட்டங்களில் பயனடைந்த மாணவ மாணவிகள் கலந்துகொண்டு தங்களுடைய வறுமையான குடும்பச் சூழ்நிலையிலும், தங்கள் கல்விக்கு தமிழக அரசின் இந்த உதவி எவ்வாறு உதவியாக இருந்தது என்பது பற்றியும் பேசினர்.
அப்போது, புதுமைப்பெண் திட்டத்தில் பலன் அடைந்து வரும் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சுப்புலட்சுமி என்ற மாணவி மேடையில் பேசியபோது, ’தாம் எதிர்காலத்தில் கணித ஆசிரியராக வருவேன்’ என தெரிவித்தார். அதைக் கேட்ட முதலமைச்சர் அவரை அழைத்து தன்னுடைய பேனாவை அவருக்குப் பரிசளித்தார். ’இந்தச் சம்பவம் தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்திருப்பதாகவும் தான் வரும்காலத்தில் ஆசிரியராக ஆனவுடன் தனது மாணவர்களிடம் இது முதலமைச்சர் கொடுத்த பேனா என்று பெருமையாகச் சொல்வேன்’ எனஅந்த மாணவி தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்துப் பேசிய தெலங்கான முதல்வர் ரேவந்த் ரெட்டி, ”தெலங்கானாவில் நான் கல்வித்துறையை கவனித்து வருகிறேன். தொடர்ந்து, அடுத்த ஆண்டு முதல் தெலங்கானாவில் பள்ளிகளில் காலை உணவுத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, நான் முதல்வன் திட்டத்தால் பயனடந்த மாணவி ஒருவர் பேசியபோது, கல்லூரியில் படித்தபோது எனக்கு என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தபோது அப்போது நான் முதல்வன் திட்டத்தின் மூலம் கிடைத்த திறன் மேம்பாட்டின் மூலமே எனக்கு வேலை கிடைத்தது. எனக்கு எப்போதுமே ஆதரவு மற்றும் ஒத்துழைப்பு அளித்த தந்தையிடம் இந்த முதல் மாத சம்பளத்தை இந்த மேடையில் அளிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன் எனக் கூறி அவரது தந்தையை மேடைக்கு அழைத்து முதல் மாத சம்பளத்தை அவரது தந்தையிடம் அளித்தார். இந்தச் சம்பவம் முதல்வர் ஸ்டாலின் உட்பட அங்கிருப்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ”தமிழக அரசு உருவாக்கித் தரும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி மாணவர்கள் உயர உயர பறக்க வேண்டும்” என அறிவுறுத்தினார். கல்வியில் சிறந்த தமிழ்நாட்டை, கல்வியில் உயர்ந்த தமிழ்நாடாக மாற்ற வேண்டும் என்றும் அவர்களிடம் மாணவர்களிடம் கோரிக்கை வைத்தார்.