செய்தியாளர்: கார்த்திகேயன்
பரபரப்புக்குப் பஞ்சமே இல்லாமல் இருந்தது இன்றைய சட்டப்பேரவை கூட்டத் தொடர். இந்தக் கூட்டத் தொடரில் நடந்த முக்கியமான நிகழ்வுகள் என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்..
நிகழ்வு 1..
பேரவையில் பேசத் தொடங்கிய முதலமைச்சர் விஜய், ”உங்களது தலைவர் குறித்து பேசியது தவறுதான். அதனால், அப்படி பேசியதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து ஆளுங்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த பேரவை உறுப்பினர்கள் பலரும், மேஜையை தட்டி ஆரவாரம் செய்தனர்.
நிகழ்வு 2..
அமைச்சர் நிர்மல்குமார் சட்டப்பேரவையில் பேசியபோது, சர்வதேச போதைக் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்குடன், முன்னாள் முதலமைச்சரின் குடும்பத்தினருக்கே தொடர்பு இருந்ததாகவும், அமைச்சர்கள் சிலரும் தொடர் வைத்திருந்ததாகவும் கூறினார். அமைச்சர் நிர்மல்குமார் பேசத் தொடங்கியதும், எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்தவர்கள் கத்தி கூச்சலிட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்குப் பதிலடி கொடுத்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், போதைப்பொருள் கடத்தலில் தொடர்பு இருந்தது தெரியவந்ததும் ஜாபர் சாதிக்கை நாங்கள் கட்சியில் இருந்தே நீக்கிவிட்டோம். ஆனால், கிரிக்கெட் மைதானத்தில் பவுடர் பயன்படுத்திவிட்டு, மாத்திரையைதான் நொறுக்கினேன் என உங்களது அமைச்சர் கூறினார். அவர் மீது ஏதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டதா? என்று கேள்வி எழுப்பினார்.
நிகழ்வு 3..
கிரிக்கெட் மைதானத்தில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி முன்வைத்த குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து, அதற்கு அமைச்சர் சரத் பதில் அளித்தார். அப்போது பேசிய அவர், ”இதற்கு முறையான விளக்கம் அளித்துவிட்டேன். இருப்பினும் இதுகுறித்து கேள்வி எழுப்புகிறார்கள்” என்று தெரிவித்தார். மேலும், அந்தச் சமயத்தில் உங்களது ஆட்சிதான் நடந்துகொண்டிருந்தது. அப்படி என்றால், நீங்கள்தான் போதைப் பொருள் விற்பனை செய்தேன் என்று ஒப்புக்கொள்கிறீர்களா? என்று ஆவேசமாக பேசினார்.
நிகழ்வு 4..
கோவை மாணவன் படுகொலை சம்பவம் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசியபோது, எதிர்க்கட்சி வரிசையில் இருந்தவர்கள் கத்தி கூச்சலிட்டனர். அப்போது, அமைச்சர் ஆவேசமாக பேசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நிகழ்வு 5..
’கடமை.. கண்ணியம்.. கட்டுப்பாடு’ என்ற அண்ணாவின் பொன்மொழியை வைத்தே, திமுகவினருக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி கொடுத்தார். அதாவது, சட்டப்பேரவைக்குள் முதலமைச்சர் விஜய் நுழைந்தபோது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுந்து நின்று மரியாதை செலுத்தவில்லை. எனவே, அவருக்கு யாராவது அந்த கண்ணியத்தைச் சொல்லிக் கொடுங்கள் என்று கூறிய அமைச்சர் ரமேஷ், அவையில் அதிக சத்தத்துடன் கத்தியபடி பேசியதால், எதிர்க்கட்சியினர் கடும் கூச்சலிட்டு, தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.