தமிழகத்தில் ஜூன் 14ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்க அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவல் மிகக் குறைவாக உள்ள பகுதிகளுக்கு தளர்வுகள் அளிக்கப்படவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
+2 தேர்வு - இன்று முக்கிய ஆலோசனை: ப்ளஸ் 2 பொதுத் தேர்வு தொடர்பாக பெற்றோர், கல்வியாளர்களிடம் இன்றும் கருத்து கேட்கப்பட்டு அந்த அறிக்கை அடிப்படையில் அடுத்தக்கட்ட முடிவை தமிழ்நாடு அரசு அறிவிக்க உள்ளது.
45+ வயதினரிடம் அதிகரிக்கும் தடுப்பூசி ஆர்வம்: கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள 45 வயதிற்கு மேற்பட்டோரிடம் ஆர்வம் அதிகரித்து வருகிறது. கோவையில் அனைவருக்கும் தடுப்பூசி போட வலியுறுத்தி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
டெல்டா மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: காவிரி டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மேலும் இரண்டு நாட்களுக்கு மழை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சசிகலா ஆடியோ - ஈபிஎஸ் பதில்: சசிகலா அதிமுகவில் இல்லை என கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார். கட்சியை வழிநடத்துவேன் என சசிகலா கூறியதாக ஆடியோ வெளியான நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
7 பேர் விடுதலையில் முதல்வர் உறுதி - சீமான்: கொரோனா நிவாரணப்பணிகளுக்காக முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர் பாரதிராஜா நிதி உதவி வழங்கினர். அதன்பிறகு அளித்த பேட்டியில் 7 பேர் விடுதலையில் முதலமைச்சர் உறுதியாக இருப்பதாக சீமான் தெரிவித்தார்.
அதிக கட்டணம் - கொரோனா சிகிச்சை உரிமம் ரத்து: கோவையில் நோயாளியிடம் அதிக கட்டணம் வசூலித்த புகாரில் தனியார் மருத்துவமனையின் கொரோனா சிகிச்சைக்கான உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கெபிராஜ் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: கராத்தே பயிற்சியாளர் கெபிராஜ் மீது மாணவி அளித்த பாலியல் புகாரில் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
தனியார் பள்ளி முதல்வர், தாளாளரிடம் விசாரணை: தனியார் பள்ளி முதல்வர், தாளாளர் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் முன் ஆஜராகியுள்ளனர். ஆசிரியர் ராஜகோபலன் மீதான புகார்கள் குறித்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
தடையின்றி குடிநீர் கிடைப்பதை உறுதிசெய்க: கொரோனா பேரிடர் காலத்தில் தடையின்றி குடிநீர் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என சேலத்தைச் சேர்ந்த கிராம மக்கள் எழுதிய கடிதம் தொடர்பாக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.
கள்ளச்சாராயம் குடித்த மாணவர்கள் மயக்கம்: கடலூரில் கள்ளச்சாாரயம் குடித்து 3 மாணவர்கள் மயங்கி விழுந்தனர். அவர்களுக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
2-வது அலையில் பொருளாதார பாதிப்பு குறைவு: கொரோனா இரண்டாவது அலையில் பொருளாதார பாதிப்பு முதல் அலை போல் அதிகமாக இருக்காது; பாதிப்பு குறையும் வரை ஆதரவான நிலைப்பாடு தொடரும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் அறிவித்துள்ளார்.