16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கிறது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு உட்பட 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்திருக்கிறது.
மோடி - சரத் பவார் திடீர் சந்திப்பு: பிரதமர் மோடியை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் திடீரென சந்தித்திருக்கிறார். நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் முக்கிய ஆலோசனை.
டிசம்பர் இறுதிக்குள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: இந்த ஆண்டு இறுதிக்குள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என அமைச்சர் கே.என்.நேரு உறுதியளித்துள்ளார்.
விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய் அமைக்க எதிர்ப்பு: விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய்கள் அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் வலியுறுத்தி இருக்கிறார்.
தி.நகரில் அலைமோதிய கூட்டம்: ஆடி மாத பிறப்பையொட்டி சென்னை தியாகராய நகரில் பொருட்கள் வாங்க மக்கள் குவிந்தனர். கொரோனா தடுப்பு விதிகள் பின்பற்றப்படுகிறதா என அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சுருக்குமடி வலைக்கு அனுமதிகோரி உண்ணாவிரதம்: சுருக்குமடி வலைக்கு அனுமதிகோரி கடலூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் மீனவர்கள் குடும்பத்தினருடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
65 கோடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய ஒப்பந்தம்: வரும் டிசம்பர் மாதம் வரை கூடுதலாக 65.5 கோடி கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்பந்தம் செய்திருக்கிறது. கோவிஷீல்டு தடுப்பூசி 205 ரூபாய்க்கும், கோவாக்சின் தடுப்பூசி 215 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வருகை: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவும் சூழலில் இன்று மாலை 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வரவிருக்கிறது. திருச்சியில் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக்கொள்ள நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
போரூர் ஏரியில் மருத்துவக்கழிவு - அமைச்சர் எச்சரிக்கை: சென்னை போரூர் ஏரி பகுதியில் மருத்துவக்கழிவுகள் கொட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என புதிய தலைமுறையில் செய்தி எதிரொலியாக ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வார இறுதி நாளில் இரவு 10 மணி வரை மெட்ரோ: சென்னையில் வார இறுதிநாளான ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களிலும் இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 10 நிமிட இடைவெளியில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை ரயில் சேவை இயங்கும் என்றும் அறிவித்திருக்கிறது.
தனியார் நீர்வீழ்ச்சிகளுக்கு படையெடுக்கும் மக்கள்: குற்றாலம் அருகே தனியார் நீர்வீழ்ச்சிகளுக்கு மக்கள் படையெடுத்து வருகின்றனர். கூட்டம் அதிகமானதால் சுற்றுலா வந்தவர்களை காவல்துறையினர் வெளியேற்றி வருகின்றனர்.
மணல் கடத்தலில் தேடப்பட்டவர் சடலமாக மீட்பு: திருவண்ணாமலை அருகே மணல் திருட்டு வழக்கில் காவல்துறையினரால் துரத்தப்பட்டதாக கூறப்படும் நபர் சடலமாக மீட்கப்பட்டார். மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவசங்கர் பாபா பள்ளி ஆசிரியைகள் தப்பியோட்டம்: சிவசங்கர் பாபாவின் பாலியல் குற்றங்களுக்கு உதவி செய்ததாக கூறப்படும் ஆசிரியைகள் தலைமறைவாகி உள்ளனர். சம்மன் கொடுக்க சென்றபோது வீட்டை பூட்டிவிட்டு தப்பியோடியவர்களை சிபிசிஐடி போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
லாரி, பைக் மோதல் - ஒருவர் பலி: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே லாரிமீது பைக் மோதியதால் வாகனங்கள் தீப்பிடித்தது. இதில் பைக்கில் சென்ற நபர் தீயில் கருகி உயிரிழந்தார்.
புகைப்பட செய்தியாளர் இறந்த விதம் எங்களுக்கு தெரியாது: இந்திய செய்தி புகைப்படக் கலைஞர் டானிஷ் சித்திக் எப்படி இறந்தார் என்பது தங்களுக்கு தெரியாது என தலிபான் செய்தித் தொடர்பாளர் விளக்கமளித்திருக்கிறார்.
2 நவீன ஹெலிகாப்டர்களை வழங்கிய அமெரிக்கா: இந்தியாவுக்கு இரண்டு அதி நவீன ஹெலிகாப்டர்களை அமெரிக்கா வழங்கியது. பாதுகாப்பு துறையில் இருநாட்டு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.